பங்காளிகளை தோற்கடிப்போம்:சிறீதரன் அழைப்பு!
பங்காளிக்கட்சிகளை தோற்கடிக்க திட்டமிடவேண்டுமென்ற தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அழைப்பு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அடுத்த தேர்தல்களில் பங்காளிக் கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அந்தத் தொகுதிகளில் தமிழரசுக் கட்சி சுயேச்சையாக வேட்பாளர்களைக் களமிறக்கி பங்காளிக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்தே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடான கலந்துரையாடல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தற்போதைய பொருளாதார இக்கட்டு நிலையில் மக்களுக்கான உதவிகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டது.
கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
„எதிர்வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அடுத்தடுத்த தேர்தல்களில் ரெலோ, புளொட் போன்ற பங்காளிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டால், அங்குச் சுயேச்சை வேட்பாளர்களைக் களமிறக்கி அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்.
கிளிநொச்சியில் நான் அப்படி சுயேச்சை வேட்பாளர்களைக் களமிறக்கினேன். அதனால் 3 சபைகளைக் கட்டுப்படுத்துகின்றேன். கிளிநொச்சியில் எவ்வளவு கட்டுப்பாடாக கட்சியை வைத்துள்ளேன். அதேபோல் ஏனைய இடங்களிலும் கட்சியைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும்.
அரசியல் படிப்பதென்றால் கள்ளுத்தவறணைக்குச் செல்ல வேண்டும். பிரதேச சபை உறுப்பினர்கள் ஊரில் நடக்கும் மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்குச் செல்ல வேண்டும். ரெலோ தனித்துச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளது. அவர்களை குற்றஞ்சாட்ட முடியாது.எம்.ஏ.சுமந்திரன் முன்னர் அதனையே செய்தார்.ஜனாதிபதிக்கு எம்மில் சிலர் வாக்களித்தனர் என்று சொல்லப்படுகின்றது. அதை அவர்களே வெளிப்படுத்துகின்றார்கள் என்றிருந்தார்.