தேசிய அமைச்சரவையில் 42 அமைச்சர்கள்?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் தனித்தனியாக அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் அடங்கிய குழுவினரை கொண்ட அமைச்சரவை கொண்ட தேசிய அரசாங்கத்தை அடுத்த வாரம் அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைந்து கொள்வதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமையினால் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கிடைத்த ஏற்பாடுகளுக்கமைய, 42 அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. மேலும், 32 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கமைய, அடுத்த வாரம் அமைச்சரவை பதவியேற்பிற்கு பின்னர் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ள 16 உறுப்பினர்களின் பட்டியலை பசில் ராஜபக்ச, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, எஸ். எம். சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சர் பதவிகள் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த குழுவிலுள்ள நால்வருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா போன்ற கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று இரவு முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.