ரணில் – பஷில் ராஜபக்ஷ சந்திப்பு இன்று
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும்,பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் 18 ஆம் திகதி முதலாவதாக பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகள்,பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இப்பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கை குறித்து இச்சந்திப்பின் போது பரிசீலனை செய்யப்படவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடிளுக்கு தீர்வு காணும் வகையில் தான் பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தாகவும்,பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவிற்கே பெரும்பான்மை உள்ளது ஆகவே சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமாயின் அதில் பொமுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.