கடத்தவில்லை:கைதே செய்தோம்-காவல்துறை!
கொழும்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்டாகோகமவின் செயற்பாட்டாளரான அந்தோனி வெரங்க புஷ்பிக கொழும்பு தெற்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த அவரை கோட்டை பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அவர் கடத்தப்பட்ட செய்தியில் உண்மையில்லை என குற்றப்புலனாய்வுத்துறையின் கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் கோட்டை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வின் கொழும்பு தெற்கு பிரிவு பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.