November 21, 2024

போராட்டகாரர்களிற்கு மரணதண்டனை:சரத் வீரசேகர

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட பலரது கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அத்தகைய குற்றச்செயல் புரிந்தவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது. அதுமட்டுமல்ல அவர்கள் அரச தொழில் உட்பட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியாதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர எம்.பி  தெரிவித்துள்ளார்.

வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும். சாதாரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாதென்றும் சரத் வீரசேக்கர எம்.பி தெரிவித்தார்

வழக்கு, நீதிமன்றம் என்று சென்றால் ஆர்ப்பாட்டத்துக்கு தூண்டி விடுபவர்கள் எவரும் பாதுகாக்க வரப்போவதில்லை. இளைஞர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை வன்முறைக்கு இடமளிக்க முடியாது.

குழப்பகரமான சூழ்நிலையை பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவசரகால நிலையை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். ஆர்ப்பாட்டமென்ற போர்வையில் பொதுமக்களின் சொத்துக்கள் வீடுகள் அரச வளங்களை சேதப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. அவற்றை தடுப்பதற்காகவே அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால நிலை நடைமுறைப்படுத்தப்படுமானால் தேவையான போது இராணுவத்தினரை கடமைக்கு அழைக்க முடியும். வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கும் அதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும். தற்போதைய போராட்டம் நியாயமான காரணங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடி நிலைமை காரணமாகவே மக்கள் ஆத்திரப்பட்டனர். அதற்கான ஆர்ப்பாட்டம் நியாயமானது.

ஆர்ப்பாட்டம் செய்வது மக்களின் உரிமை. எனினும் அது வன்முறையாக வெடிக்கக் கூடாது. அதேவேளை அரசாங்கத்தை கவிழ்க்கும் வகையில் அதனை முன்னெடுப்பது குற்றமாகும்.அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் ஜனாதிபதியை வெளியேற்றுவதற்கும் பிரதமரை வெளியேற்றுவதற்கும் பிரபுக்களை படுகொலை செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அது குற்றவியல் சட்டத்தின்படி மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

போராட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மனிதாபிமானமற்ற ரீதியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert