பிரித்தானியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை!!
கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் ஈழத்தமிழர்களையும் இலங்கைத் தமிழர்ககளையும் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் , 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்ட ஒரு பெரும் தமிழின அழிப்பை நிகழ்த்திய கோரமான நிகழ்வாகும். இன்றோடு 39 ஆண்டுகள் கடந்தோடிவிட்டது.
இன்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது. 10 Downing வீதி முன்பாக பல வீதிகள் மாறுபட்ட போராட்டங்கள் காரணமாக முடக்கப்பட்ட நிலையிலும் நூற்றுக்கணக்கான மக்களுடன் கண்டன போராட்டத்தினை தொடர்ந்து நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வானது பிரித்தானிய தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமானது, பிரித்தானிய தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு தேசிய செயற்பாட்டாளர் உதயணன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசியகொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தென் மேற்கு பிராந்திய நிர்வாகப் பொறுப்பாளர் திரு அசோகன் ஏற்றிவைத்தார் .
ஈகைச்சுடரினை தேசிய செயற்பாட்டாளர் ஆறுமுகம் ஜயா அவர்கள் ஏற்றிவைத்ததை தொடர்ந்து தமிழீழ தாயகத்தின் வானொலியான புலிகளின் குரலில் பணியாற்றிய திரு சுரேஷ் கோபி அவர்கள் மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.
நிகழ்வில் TYO வின் ஆங்கில உரையுடன் கவிதைகள், நடனங்கள் மற்றும் உரைகள் இடம்பெற்றன.
தமிழீழம் கிடைக்கும் வரை பயணிப்போம் என்ற உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவடைந்தது.