21 நிறைவேற்றப்பட்டாலும் கோட்டா அதிகாரங்களுடன் பதவியில் தொடர்வார் – சுமா
அமைச்சரவையின் அனுமதி அளித்துள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமானது நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரங்களுடன் தான் பதவியில் நீடிக்கப்போகின்றார்
என்பதால் இந்தத் திருத்தம் வெறுமனே மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்ரூபவ் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
அத்துடன், குறித்த திருத்தச்சட்டமானது அடுத்துவரவுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரங்களையே குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், 19ஆவது திருத்தச்சட்டத்தினையும் விடவும் வலுக்குறைந்தாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
21 ஆவது திருத்தச்சட்டத்தின் வரைவு இன்னமும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையில் அது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இறுதியான தீர்மானத்தினை எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்றதன் அடிப்படையில் தன்னுடைய நிலைப்பாட்டினை தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
21ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக நீதியமைச்சர் விஜயதாவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்கேற்றதன் அடிப்படையில் அதன் உள்ளடக்கம் சம்பந்தமாக சில விடயங்களை அறிய முடிந்துள்ளது.
முதலாவதாக, தற்போதைய உத்தேச 21ஆவது திருச்சட்டமானது, ஏற்கனவே காணப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தினை விடவும் மிகவும் வலுக்குன்றியதாகவே காணப்படுகின்றது. அவ்வாறான திருத்தச்சட்டமொன்றுக்கு ஆதரவளிப்பதில் எவ்விதமான பலன்களும் இல்லை
அதேநேரம், 21ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரங்களுடன் தான் பதவியில் இருக்கப்போகின்றார்.
ஏனென்றால், நிறைவேற்றப்படும் 21ஆவது திருத்தச்சட்டமானது, அடுத்த ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் தான் நடைமுறைக்கு வரப்போகின்றது. ஆகவே அதனால் எவ்விதமான பயன்களும் தற்போது கிடைக்காது.
கோட்டா கோ கம போராட்டாக்கரர்கள் உட்பட நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தன்னெழுச்சியான போராட்டங்கள் பதவியில் உள்ள ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.
அதேநேரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முழுமையாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றன. ஆகவே அவ்விரண்டு விடயங்களிலும் எவ்விதமான மாற்றங்களின்றி அரசியலமைப்பில் திருத்தமொன்றை மேற்கொள்வதானதுரூபவ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
அத்துடன், இந்த அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் தமிழ்த் தேசிய பிரச்சினை தொடர்பில் எவ்விதமான விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படாமை பெரும் பின்னடைவாகும். அவ்விதமான 21ஆவது திருத்தச்சட்டத்தினை நாம் எவ்வாறு ஆதரிப்பது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு என்றார்.