புத்தர் சிலைக்கு எதிர்ப்பு அல்ல!
நாகவிகாரையில் புத்த பெருமானின் சிலையை நிறுவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். அப்படியானவர் யாரும் இங்கு இல்லை. என்று வட மாகாண சபை அவைத் தலைவர் மற்றும் முன்னாள் யாழ்ப்பாண மாநகர ஆணையாளருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர,“அண்மையில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.” என்று கூறியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
யாழ்ப்பாண நகரத்தின் சிரேஷ்ட குடியிருப்பாளர் என்ற வகையில் மட்டுமன்றி இந்த நகரத்தின் நிர்வாகத்திலும் விவகாரங்களிலும் கடந்த 60 வருடங்களாக தொடர்புடையவன் என்ற வகையில் இந்தக் கூற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படி எந்த நிகழ்வும் நாகவிகாரையில் நடந்ததாக எவருக்கும் தெரியாது.
இவரின் கூற்று பாராளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழிநடாத்தும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும்.
இவரும் இவரைப் போன்றவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பல தசாப்தங்களாக நாக விகாரையுடனும் அதன் விகாராதியுடனும் மிகவும் மேம்பட்ட புரிந்துணர்வையும் அன்னியோன்மத்தையும் யாழ்ப்பாண மக்கள் பேணி வந்துள்ளனர்.
நாகவிகாரையின் உள்விவகாரங்களில் எவருமே தலையிட்டதும் கிடையாது. அப்படி இருக்கையில் நாகவிகாரையில் புத்த பெருமானின் சிலையை நிறுவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். அப்படியானவர் யாரும் இங்கு இல்லை.
மேலும் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இந்தியாவின் தமிழ்நாட்டிலும் இலங்கையின் வடபகுதியிலும் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த வரலாறு பற்றி பல அறி ஞர்கள் எழுதியுள்ளனர். இங்குள்ள பௌத்த எச்சங்கள் யாவும் தமிழ் பௌத்த எச்சங்களே தவிர சிங்கள பௌத்த எச்சங்கள் அல்ல.
தென்னிலங்கையின் பௌத்த மத உள்வருகையில் யாழ்ப்பாண தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அவர்களின் ஆதரவு இல்லாமல் சங்கமித்தவும் அறஹத் மகிந்தவும் மாதகல் ஊடாக அனுநாதபுரம் சென்று வெள்ளரசு மரத்தை நாட்டி புத்த சமயத்தை பரப்பியிருக்க முடி யாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
கால ஓட்டத்தில் சிதைவுற்ற பல சைவ ஆலயங்களின் எச்சங்களை பௌத்த மத எச்சங்கள் என்று புனைந்து பௌத்த விகாரைகளை அமைக்கவும், அந்தந்தப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்த சைவத் தமிழ் மக்களின் நிலங்களை மதத்தின் பெயரால் அபகரிப்பதும் அடாத்தான செயல்கள். இவற்றை தமிழ் மக்கள் எதிர்த்து குரல் எழுப்பி போராடியே தீருவர் – இவற்றை அச்சுறுத்தல்கள் மூலம் அடக்கி விடலாம் என்பது பகற் கனவு
தமிழர்கள் கடந்த எழுபது வருட காலத்தில் கே.எம்.பி.ராஜரட்ண, தேமிஸ், என்.கியூ.டயஸ், ஜெயசூரிய, சிறில் மத்திய போன்ற பல இனவாதிகளைக் கண்டவர்கள். – இப்பொழுதும் சரத் வீரசேகர, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற சிங்கள பௌத்த பேரினவாதிகளையும் அதே நிலைப்பாட்டியே உள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் காண்பவர்கள்.
இவர்களுக்கு எவ்வாறு அவர்களது சிங்கள பௌத்த அடையாளம் உணர்வுபூர்வ மானதோ அதேபோல் தமிழ் இந்துக்களுக்கு அவர்களது அடையாளம் உணர்வுபூர்வ மானது. இனத்துவ மற்றும் சமய அடையாளங்களைப் பேணிக் காக்கவே நாம் போராடுகின்றோம் என்பதை சிங்கள பேரினவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். எமது போராட்டம் சிங்கள மக்களுக்கோ புத்த மதத்திற்கோ எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார்.