பிரித்தானியாவில் தமிழர் காணியில் குடிகொண்டார் புதுமை அந்தோனியார்.


கோடி அற்புதர் என பல் சமூக மக்களால் அழைக்கப்பட்டுவரும் புனித அந்தோனியாரின் ஆண்டுப் பெருவிழா பிரித்தானியாவின் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள புனித அற்புத அந்தோணியார் ஆலயத்தில் வருகின்ற யூன் மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத்திருவிழாவானது திருநாள் செபமாலை, திருநாள் திருப்பலி, திருச்சிலுவை சுற்றுப்பவனி, திருச்சொரூப ஆசீர்வாதம் என்று முழுமையான திருநாள் விழாவாக தாயகத்தில் நடைபெறுவதுபோன்றும், தாயகத்தின் சூழலை உணரும் வகையிலும் இயற்கையான வெளியில் மிகுந்த அமைதியான பகுதியில் நடைபெற ஏற்பாடாகி வருகின்றது.
சாவின் பின்னரும் நித்திய வாழ்வில் நிலைத்திருக்க எண்ணும் கோடானகோடி மக்களில் அற்புத அந்தோனியாரில் நம்பிக்கை வைத்தவர்களாக நாமும் அவரின் திருப்பாதம் பணிந்து எமது வேண்டுதல்களை ஒன்றுகூடி நிறைவேற்றுவோம்.
போரின் வலிகளைத் தாங்கியபடி,
சொந்தமண்ணில் வாழ முடியா சுதந்திரத்தை பறிகொடுத்தும், உறவுகளைப் பிரிந்திருந்தும்,
தாயகம் திரும்பும் கனவுகளைச் சுமந்துகொண்டும்,மனித வாழ்க்கையில் வந்துபோகும் ஏனைய இன்ப-துன்பங்களோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களும் அற்புத அந்தோனியாரைத் தரிசித்து அவரின் நல்லாசிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருவிழாவில் பங்கேற்குமாறு திருவிழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் திருப்பயணம் பலனற்றதாகி போகுமோ? எங்கள் அழுகை கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? ஐயனே! எங்களின் அன்பான தகப்பனே எங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை கையேற்று கொண்டு ஆசிர்வதித்தருளும்.