September 28, 2024

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

ழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப் போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள் – மே18 இன் பதினைந்தாம் ஆண்டு நிறைவில், வையகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியோடு நினைவேந்திட தயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப்போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த, தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கனன்று தேசவிடுதலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

சிங்களப் பேரினவாத அரசிற்குப் பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதன் காரணமாக, 2009 மே 18 இல் தமிழீழ நடைமுறை அரசின் தேசிய இராணுவம் ஒரு தற்காலிகப் போரியல் பின்னடைவைச் சந்தித்தது. பல நாடுகளின் ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒரு பெருஞ்சமரின்  பின்னடைவை, ஒரு பாரிய வெற்றியாகச் சிங்கள அரசு இறுமாப்புடன் கொண்டாடியது. ஆனால், தமிழினத்தின் அசைவியக்கமும் பலமும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கோட்பாடுதான்  என்பதை, சிறிலங்காவின் பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் கணிக்கத் தவறிவிட்டனர்.

உலகின் அசைவியக்கதில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கி, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட தமிழினத்தின் வழிகாட்டியே தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஆகவே, அவர் இயல்பாகவே உருவாகிய தலைவர், உருவாக்கப்பட்டவர் அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் அவர்தான். இந்த ஒப்புவமையற்ற தமிழீழ விடுதலைச் சிந்தனையை அழிக்கவேண்டுமாயின், தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என அறிவித்து,விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்க வேண்டும்.  இவ்வறிவிப்பின் ஊடாக,தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்து விட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும்.

இவையெல்லாம் சரிவர நடந்தேறினால், தேசியத்தலைவரின் சிந்தனைக்கேற்ப, மாவீரர்களின் உயிர்விதைகளால் அத்திவாரமிட்டு, மக்களின் அர்ப்பணிப்புக்களால் உறுதியாகக் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டம், தன்னைத்தானே அழித்துவிடும் என எதிரிகள் கனவுகாண்கின்றனர். இதுதான்> எமது எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் தெளிவான நிகழ்ச்சிநிரலாகும்.

தமிழீழக் கோட்பாட்டை அழிக்கவல்ல, நுணுக்கமான இப்புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடைய பூகோள, வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகிறது.

இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இயங்குவிசையையும் தளத்தையும் செல்நெறியையும் மடைமாற்றம் செய்வதற்காக, தேசியத்தலைவரின் குடும்ப அங்கத்தவர்கள் சார்ந்தும்; புதல்வி துவாரகா,அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுச் சனநாயக ரீதியில் போராட்டத்தைக் கொண்டு நடாத்தப் போகிறார் எனவும் சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சில நடவடிக்கைகள்  களமிறக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் ஊடாகப் பலரிடம் நிதி திரட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தக்குழுவின் அரசியல் கட்டுக்கதைகளை முத்திரையிடுவதற்காக, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) என்னும் புலம்பெயர் தேசத்தில் செயற்பாடற்ற காகித நடவடிக்கை அமைப்பொன்று,மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்,மட்டுப்படுத்தப்பட்ட சமூக ஊடக வெளிப்பாடுகளையும் செய்துவருகிறது. தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப் பாரம்பரியங்களையும் கட்டுக்கோப்புகளையும் சிதைத்து,தமிழீழ விடுதலைக்கோட்பாட்டை அழித்து, தேசியத்தலைவரின் பெருமதிப்பை இல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்து வருகின்றார்கள்.

அன்பார்ந்த மக்களே!

ஒருபுறம், தமிழீழத் தேசியத்தலைவரின் புதல்வியின் வருகை என்னும் தமிழீழவிடுதலைப் போராட்ட மரபுகளைத்தாண்டிய தமிழீழக் கோட்பாட்டுச் சிதைப்பு நடவடிக்கை,மறுபுறம் தமிழீழத்தின் வாழும் சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என்னும் சொல்லாடலினுள் அடக்கி,விளக்கேற்றுதல் என்னும் நடவடிக்கை. இவ்விரண்டு நடவடிக்கைகளும் தமிழீழக் கோட்பாடு என்னும் தேசியத்தலைவரின்  சிந்தனை மூலோபாயத்தை அழிப்பதற்காக, எதிரிகளினால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்நடவடிக்கைகள்,தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்தப் போகும் பின்னடைவுகளை விளங்கிக்கொள்ளாமல்,உணர்வெழுச்சியினால் உந்தப்பட்டு சில தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் மடைமாற்றப்பட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. ஆனால், தேசியத்தலைவரின் சிந்தனையானது இதிலிருந்து அவர்களை மீட்கும் எனத் திடமாக நம்புகிறோம்.

பேரன்புமிக்க எமது மக்களே !

காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை நாம் கண்டறிந்து, முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறான உண்மைக்குப் புறப்பான கதையாடல்களைப் புறந்தள்ளி,இச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

காலநதியில் கரைந்து போகாத எமது விடுதலைப் பயணங்கள்,தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்னும் பேராளுமையின் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை  நோக்கித் தொடர்ந்தும் பயணிக்கும். அது,எந்நிலையிலும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில், தமிழீழத் தேசியத்தலைவரின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோம்.

„புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்“

அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமி

ழீழ

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert