தராகியை கொன்ற புளொட்டை இணைத்தது துரோகம்!
இராணுவத்துடன் சேர்ந்து 2009 வரையும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க உழைத்த ஊடகவியலாளர் சிவராமை படுகொலை செய்த புளொட் இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப் பில் இணைத்துக் கொண்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் செய்த மிகப் பெரும் தவறு. அதைப்போன்ற கேவலமான வேலை இருக்க முடியாது என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கங்களின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார் .
மட்டக்களப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18ஆவது ஞாபகார்த்த தினத்தையிட்டு நினைவேந்தலும் ‚ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்‘ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (29) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாள்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதை காண்கின்றேன். இன்றைய நிலையில் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. ஊடகவியலாளர்களை தாக்குவது அரசியல்வாதிகளால் இடம்பெற்றுள்ளது. அதில் மட்டக்களப்பில் முதலாவதாக புளொட் இயக்கத்தால் நித்தியானந்தன் என்ற ஊடகவியலாளர் கழுத்து வெட்டப்பட்டு இறக்கும் நிலைக்கு சென்று உயிர் தப்பினார்
அதன் பின்னர் அதே புளொட் இயக்கம் தான் ஊடகவியலாள் சிவராமை கடத்தி படுகொலை செய்தவற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு துணை போனதுடன் கைது செய்யப்பட்ட தடயங்கள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் மிகப் பொரிய கவலை என்னவென்றால் இராணுவத்துடன் 2009 வரையும்; சேர்ந்து அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்த அதே புளொட் இயக்கம் அரசியல் தலைமைகள் என்று உருவாக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் புளொட்டை இணைத்தது உண்மையிலே மிகவும் வேதனையான விடயம் இது ஓர் அரசியல் பார்வையில் கேவலமானது என நான் பார்க்கின்றேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க ஊடகவியலாளர் சிவராம் எவ்வாறு உழைத்தாரே அதை ஒரு மூல வேராகக் கருதினாரே அவரையே சுட்டுக் கொன்ற புளொட் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து புனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இது சம்பந்தன் ஜயாவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தவறு தவறுதான். இது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் செய்த மிகப் பெரிய தவறு.
வெளிப்படையாக கட்டுரை எழுதினேன். இது மன்னிக்க முடியாத குற்றம். 2009 வரைக்கும் இராணுவத்துடன் சேர்ந்து படுகொலை புரிந்த ஓர் அமைப்பை அதே தமிழ் மக்களின் அரசியல் தலைமையுடன் இணைத்துக் கொள்வது அதைப்போன்ற கேவலமான வேலை இருக்க முடியாது. இது தொடர்பாக தமிழ் மக்கள் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை என்பது கேள்வியாக இருக்கின்றது.
அதேபோன்று லசந்த விக்கிரமதுங்க உட்பட பல சிங்கள ஊடகவியலாளர்களைபடுகொலை செய்த இந்த ஆட்சியாளர்களை 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்துள்ளது என வீரவாக்கியம் பேசியவரை எந்த மக்கள் வாக்களித்தார்களோ அந்த மக்களால் வீட்டுக்குப் போ என்று சொல்லுகின்றளவுக்கு வந்திருக்கின்றது.
அதேபோன்று ஊடகவியலாளர் நடேசன் மற்றும் தம்பையா உட்பட பலபேரை படுகொலை செய்தவர்களை 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மட்டக்களப்பு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே 69 இலட்சம் மக்கள் எடுத்த முடிவை எப்போது மட்டக்களப்பு மக்கள் எடுப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.