சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு
இத்தாலி நாட்டின் பலெர்மோ பிராந்தியச் செயற்பாட்டாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்கள், 17.05.2022 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
1995ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே, சுதந்திரத் தமிழீழமே தமிழ்மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையுமென்ற உறுதியான நிலைப்பாட்டுடன் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும், தமிழீழத் தேசியத்தலைவரையும் நேசித்துத் தேசியச் செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக்கொண்டவராவார்.
எமது தேசம் நோக்கிய செயற்பாடுகள் துறைசார்ந்து விரிவாக்கம் பெற்ற போது கல்விச்சேவை, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எனக் கிளையால் வழங்கப்படும் பணிகளை ஏற்று அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிறந்த செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவராவார்.
18-06-2008 அன்று இத்தாலி நாட்டில் தேசியப்பணியாற்றிய அனைத்துச் செயற்பாட்டாளர்களையும் இத்தாலிய அரசு பயங்கரவாத முத்திரைகுத்தி கைதுசெய்ததால் எமது தேசியச் செயற்பாடுகள் முடக்கப்பட்டபோது மீண்டும் நாம் இத்தாலித் தமிழர் ஒன்றியம் எனும் கட்டமைப்பை உருவாக்கிய வேளையில் அதன் உபதலைவராகப் பொறுப்பேற்று இறுதிநாள்வரை பணியாற்றியவராவார்.
தமிழின அழிப்பின் உச்சம்தொட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின், அனைத்துலகரீதியாக எமது தேசியக்கட்டமைப்புக்களைச் சிதைப்பதற்கு, எதிரியாலும் துரோகிகளாலும் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதற்குக் கிளையுடன் இணைந்து ஆற்றிய பணி மிகவும் காத்திரமானது.
இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சபாரட்ணம் வாமதேவன் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.