ரணிலும் காசு அச்சிடுகிறார்?
மீண்டும் பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை என்றாலும் பணத்தை அச்சிட நேரிடும். பணத்தை அச்சிடவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாது.
மிக உக்கிரமான பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். ஆங்கிலேயர்கள் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் கூட இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என நான் நினைக்கின்றேன்.
இந்த ஆண்டே எமக்கு மிகவும் கடினமான ஆண்டு. அந்நிய செலாவணி இல்லை. அரசாங்கத்திற்கு வருமானம் கிடையாது. அந்நிய செலாவணியுடன் வர்த்தகங்கள் நடக்கவில்லை என்றால், வருமானம் குறையும்.
ரூபாய் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணியுடன் வர்த்தகம் செய்யவில்லை என்றால், வரியை செலுத்த முடியாது. வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும்! ரணில் எச்சரிக்கை
அந்நிய செலாவணி நெருக்கடியால், ரூபாய் கிடைக்கும் வருமானமும் கிடைப்பதில்லை. தற்போதைய நிலைமையில் சுமார் மூன்று பில்லியன் டொலர்கள் வரை தேவைப்படுகிறது.
இதனை பெற்றுக்கொள்வதே எமக்கு இருக்கும் முதலாவது சவால். அதனை பெற்றுக்கொள்ளவே நான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் இவற்றை செய்ய முடியும். இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலும் 1939 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான்கு உறுப்பினர்களே இருந்தனர். எனினும் பிரதமராக பதவியேற்று போரையும் வென்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.