கைதிகளை வாடகைக்கு விடுத்த விவகாரம் :விசாரணை
காலிமுகத்திடலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களை தாக்க சிறைகைதிகளை வழங்கிய விவகாரம் சூடுபிடித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(12) அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று(12) பிற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
வட்டரெக்க சிறைச்சாலை கைதிகள் சிலர், கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நாளை(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நேற்று(11) ஆணைக்குழுவில் ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் முன்வைத்த விடயங்களின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.