November 24, 2024

முள்ளிவாய்கால் நினைவேந்தல்: அண்ணாமலைக்கு அழைப்பு: கொதிக்கும் முற்போக்கு அமைப்புகள்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடத்தும் முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்த கருத்தரங்கில் பேச தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என முற்போக்கு அமைப்புகள் அறிவித்துள்ளன.

இலங்கை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக சென்னை தியாகராயர் நகரில் 14 ஆம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் நினைவேந்தர் உரையை ஆற்றுவார்கள் என விழா அழைப்பிதலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர்களுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் இடம்பெற்று இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்களை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் மீதும் பலர் சந்தேகங்களை முன்வைக்கத் தொடங்கினர். இந்த நிலையில், தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

திருமுருகன் காந்தி இதுகுறித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், „முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை‘ நினைவேந்தல் – கருத்தரங்க பங்கேற்பாளர்கள் பட்டியலில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழீழ விடுதலைக்காக நீண்டகாலமாக பல்வேறு வகையில் பங்களிப்பு செய்த பல அமைப்புகளை சேர்ந்த தலைவர்களின் பெயர்களோடு, தமிழின விரோதமாக செயல்படும் பாஜகவின் மாநில தலைவர் பெயரும் நினைவேந்தல் உரையாற்றுபவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் ‚இசுலாமியர்களை இனப்படுகொலை செய்வோம்‘ என பகிரங்கமாக அறிவித்து செயல்படும் பாஜகவோடு மே பதினேழு இயக்கம் கருத்தரங்கில் பங்கேற்பது இயலாத ஒன்று. இனப்படுகொலை எனும் மனித குலத்திற்கு எதிரான கொள்கைகளை தன்னகத்தே வைத்து போற்றும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இந்துமதவெறிக்கூட்டத்தோடு எவ்வித சனநாயக கோரிக்கையையும் பகிர்ந்து கொள்வது என்பது அக்கோரிக்கையையே கொச்சைப்படுத்துவதாகும். மேலும் பாசிச ஆற்றல்களுக்கு எதிராக ஒன்று திரளும் சனநாயக ஆற்றல்களோடு பாசிச இனவெறி-மதவெறி பிரதிநிதிகளை சேர்ப்பது, ஓநாய்க்கூட்டத்தை வரவழைப்பது போன்றதே. தமிழ்நாட்டின் தமிழீழ ஆதரவு தளத்தை தளரச்செய்யும் மதவாத பாசிச ஆற்றல்களின் பங்கேற்பை மே பதினேழு இயக்கம் என்றுமே ஆதரிக்காது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று அங்கீகரிக்காத எந்தவொரு கட்சி, இயக்கத்துடன் இயங்குவது தமிழின விரோதமானது. இந்நிகழ்வில் பங்கேற்கும் தோழமை அமைப்புகளும் இவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்குமென உறுதியாக நம்புகிறோம்.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், „தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பாக, 14-05-2022 அன்று, சென்னை திநகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் அவர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்த ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. ஆனால், இந்த கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றிய சித்தாந்ததுடன் தொடர்புடைய பாசிச பாஜகவை சேர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலையும் அழைக்கப்பட்டிருப்பது முரணானது. இனவெறுப்பையும், இனப்படுகொலையையும் தங்களது கொள்கைகளாக கொண்ட பாசிச பாஜக, இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து பேச அருகதையற்றது என்பதை எல்லோரும் அறிவர். அதேபோல் சிங்கள கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை காக்க ஒரு சிறு துரும்பைக் கூட நீட்டாமல் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. ஆகவே, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கருத்தரங்கு நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கலந்துகொள்ளாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, „சென்னையில் வருகிற 14.05.2022 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பாக நடக்க இருக்கிற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் கருத்தரங்கத்தில் என்னையும் கலந்து கொள்ளுமாறு அமைப்பாளர் கடந்த வாரம் கேட்டார். அந்த நாளில் 14.05.2022 அன்று தென்காசி மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மண்டல மாநாடு இருக்கிற காரணத்தால் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று அப்போதே நான் சொல்லியிருந்தேன். என்றபோதிலும் இப்போது எனது பெயரும் அந்த அழைப்பிதழில் இருக்கிறது. யாரையேனும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அனுப்பலாம் என்று கருதினாலும், பட்டியலில் காணும் தலைவர்களில் சிலர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மீதோ,அதன் தொடர்ச்சியாக ஈழ மக்கள் படும் துயரம் குறித்தோ, அந்த மக்களுக்கு ஓர் நிரந்தர அமைதியான தீர்வைத் தேடித் தர வேண்டும் என்ற அக்கறையோ அற்றவர்கள் என்பதோடு, திதி திவசம் போல் கருதிக்கொண்டு அதில் கலந்து கொள்வதாகவே நான் புரிந்து கொள்கிறேன். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் யாரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.“ எனப் பதிவிட்டுள்ளார். என்ற அக்கறையோ அற்றவர்கள் என்பதோடு,திதி திவசம் போல் கருதிக்கொண்டு அதில் கலந்து கொள்வதாகவே நான் புரிந்து கொள்கிறேன். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் யாரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.“ எனப் பதிவிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert