பற்றி எரிகிறது அலரிமாளிகை சூழல்!
மகிந்த வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனாகோகம“ மீதும் கூடாரங்களின் மீதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அட்டாகாசத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூடாரங்களை பிய்த்து எறிந்து, தீ மூட்டி கொளுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதி எங்கும் கரும்புகையால் மூடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாள்கள், இரும்பு கம்பிகள் மற்றும் குண்டாந்தடிகளை ஏந்தியவாறு ரகளையில் ஈடுபட்டு, அடாவடித்தனங்களை காண்பித்துள்ளனர். அக்குழுவைச் சேர்ந்த இன்னும் சிலர்,இலங்கை தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மைனாகோகாமா மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கோட்டாகோகமவுக்கு செல்வதற்கும் அவர்கள் தயாராகி வருகிறார்கள்.
இதேவேளை பொலிஸார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கோட்டாகோகமவுக்கு செல்வதைத் தடுத்து வருகிறார்கள். எவ்வாறாயினும் கோட்டாகோகமவில் உள்ள கூடாரங்களை பொலிஸார் அகற்றவில்லை என்றால், நாங்கள் அவற்றை அகற்றி அங்கிருப்பவர்களை விரட்டியடிப்போம் எனவும் அங்கிருப்பவர்கள் எச்சரிப்பதை அவதானிக்க முடிகிறது.
இதனிடையே காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‚கோட்டா கோ கம’வில் உள்ளவர்கள் மீது இன்று தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால், நாளை அந்த இடத்துக்கு தான் வருவேன் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் வலைத்தளத்திலேயே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு பதிவிட்டுள்ளார்.