மக்கள் எழுச்சியை ஏமாளியாக்கும் “பட்ச’முள்ள ‚ராஜ‘ குடும்ப சடுகுடு! பனங்காட்டான்
அணிசேர முடியாத எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை தமது பலமாகப் பார்க்கும் கோதபாய – மகிந்த சகோதரர்கள், தங்களின் அதிகார மோகத்தை நிறைவேற்ற பன்முக நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். காலிமுகத்திடலும் அதன் பின்னாலுள்ள ஷவல்ல| சக்தியும் இதனை உணரத் தவறின், 69 லட்சம் வாக்குகள் தங்களுக்கொரு முள்ளிவாய்க்காலை தரிசிக்க நேரலாம்.
ஒரு குடும்ப ஆட்சி நாட்டை அழிக்கிறது, அதற்குக் காரணமானவர்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பினால்தான் நாடு உருப்படும் என்ற கருத்தியலின் அடிப்படையில் இலங்கைத் தீவு இன்று போராட்டக்களமாக மாற்றம் பெற்றுள்ளது.
அரசியல் ஆதாயம் தேடாத – அரசியல் பின்னணி ஏதுமில்லாத இளையோரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வியாபித்து அனைவரையும் உள்வாங்கியுள்ளது. 29ம் திகதியன்று பலநூறு தொழிற்சங்கங்களினால் ஏற்படுத்தப்பட்ட மாபெரும் பேரெழுச்சியால் நாடு முற்றாக முடங்கியதைக் காணமுடிந்தது.
இவை ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இவைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்பது போன்று காட்டியவாறு, ராஜபக்சக்கள் தங்கள் இருப்புக்கான அரசியலை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
மார்ச் மாதம் 31ம் திகதி ஆரம்பமான தன்னெழுச்சி இதுவரை கேட்கப்படாத அல்லது எதிர்பாராத சில அறுவடைகளைக் காட்டியுள்ளது. ஆனால், முன்வைக்கப்பட்ட – எதிர்பார்க்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேறவில்லை.
போராட்டத்தின் ஆரம்பகால அடிநாதமாக அமைந்தது கோதபாயவை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவது. அவர் பதவியை தாமாகத் துறக்காவிட்டால், பதவியிலிருந்து அகற்றப்படுவாரென்றே கர்ச்சிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடந்தவைகளும் இப்போது நடப்பவைகளும் திசைமாறி வேறுபக்கம் செல்கின்றன.
அரசியல் பாதையை கிஞ்சித்தும் அறியாத துப்பாக்கிமோகரான கோதபாயவின் காய் நகர்த்தல்கள், தோளில் கைகளைப் போட்டு அணைத்தவாறு ஒருவரின் கழுத்தை நெரித்து மூச்சை நிறுத்தம்காணச் செய்வது போன்றது.
தமக்கு எதிரான போராட்டத்தை தமது அமைச்சர்களுக்கு எதிரானதாக காட்டுவது போன்று முதலில் அமைச்சரவையைக் கலைத்தார். முக்கியமாக தமது சகோதரர்கள் சமல், பசில் ஆகியோரையும், பெறாமக்களான நாமல், சசீந்திரா ஆகியோரையும் எட்ட வைத்தார்.
அடுத்து, தமக்கு மிகமிக நம்பிக்கையான நால்வரை மட்டும் மீண்டும் அமைச்சராக நியமித்தார். சில நாட்களின் பின்னர் இளம் அரசியல்வாதிகளை கூடுதலாக உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை அறிவித்தார். முன்னர் ராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் இவர்களுள் பலர். ஆனால், இவர்களுள் அநேகர் மூத்த அமைச்சர்களாக இருந்தவர்களின் குடும்ப உறவுகள்.
இந்த முயற்சியினால் இவரால் போராட்டக்காரர்களை ஆற்றுப்படுத்த முடியவில்லை. அதேசமயம், கோதாவை வீடு போ என்ற கோசம் மகிந்தவையும் இணைத்துக் கொண்டது. காலிமுகத்திடலுக்கு கோதாவின் பெயரைச் சூட்டிய போராட்டக்காரர்கள், மகிந்தவை வீடேகுமாறு குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இது கோதபாயவுக்கு வாய்ப்பாக அமைந்தது. இவரே இதனைத் திட்டமிட்டு செயற்படுத்தியதாகவும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. இதனால் யார் முதலில் வீடு செல்ல வேண்டுமென்ற கேள்வி தாமாக எழுந்துள்ளது.
கோதபாயவை தங்களின் முதலாம் எதிரியாக நிறுத்தி அவருக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்து ஆதரித்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார குழுவினர், திடீரென பல்டி அடித்து மகிந்தவை பதவி விலகுமாறு கோசிக்கத் தொடங்கினர்.
இந்த மாற்றம் காலிமுகத்திடலின் வலிமையான குரலால் ஏற்பட்டதா, அல்லது மகிந்தவை வெளியேற்றிய பின்னர் கோதாவை இலகுவாக வெளியேற்றலாமென்ற எண்ணத்தின் பிரதிபலிப்பா என்பது தெரியவில்லை.
இதனையடுத்து உருவான அரசியல் நிலைவரம் விசித்திரமானது. நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டும் 21வது அரசியல் திருத்தத்தை உருவாக்குவது, தேவைப்பட்டால் சபாநாயகர் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்று பலவகையறாக்களாக அறிவித்தல்கள் வந்தன. ஆனால், ஜனாதிபதி கோதாபாயவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை என்ற பதவி நீக்கும் முயற்சி பிசுபிசுத்துப் போய்விட்டது.
குழப்பமான புதிய அரசியல் போக்கை கோதபாய இலகுவாக தமக்கு சாதகமாக்க முனைந்தார். இவர் சார்ந்த முன்னைய அமைச்சர்கள் சிலர் மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதை இலக்காகக் கொண்டு அறிக்கைகளை மட்டுமன்றி ஜனாதிபதிக்கு மகஜர்களையும் சமர்ப்பித்தனர்
அரசியல்வாதிகள் அனைவருக்கும் பிரித் ஓதி கைகளில் நூல் கட்டி ஆசீர்வதிக்கும் மகாநாயக்கர்களும் அவர்களின் மகாசங்கங்களும் இக்கட்டத்தில் உள்நுழைய ஆரம்பித்தனர். சர்வகட்சிகளையும் சேர்ந்த இடைக்கால அரசு அமைக்கும் ஆலோசனையை இவர்கள் முக்கியப்படுத்தினர். கோதாவும் அதற்கு இணங்கினார்.
இதனை தமக்குப் பலமாக்க விரும்பிய மகிந்த அதனை வரவேற்று அறிக்கை விட்டதோடு, இடைக்கால அரசு அமைந்தாலும் தாமே தொடர்ந்து பிரதமர் என அறிவித்தார். இது, கோதபாய அணியினர் எதிர்பாராதது.
எல்லாமே சிதம்பர சக்கரமாக மாறிய நிலையில், இடைக்கால அரசில் புதிய பிரதமர் தலைமையில் சகல கட்சிப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஆட்சியை ஏற்படுத்தப் போவதாக கோதபாய அறிவித்தார். இது நிறைவேறினால் மகிந்த பிரதமர் பதவியை இழக்க நேரிடும், அப்படியொரு நிலைமை ஏற்படுமானால் மகிந்த எதிர்க்கட்சித் தலைவராகலாம் என்ற குண்டை சில ஊடகங்கள் வெளிப்படுத்த, தமது பதவிக்கு ஆபத்து என்பதை உணர்ந்த சஜித் பிரேமதாச நிலைகுலைய நேர்ந்தது.
அரசியல் சாணக்கியரான ரணில் இங்கும் அங்குமாக குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார். இவருக்குப் பக்கபலமாக கூட்டமைப்பின் சுமந்திரனும் தமது பங்களிப்பை வழங்கினார். இதனால், மக்கள் போராட்டக்களமும் சீரமைக்கப்பட வேண்டிய அரசியல்களமும் வெவ்வேறு திசைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டன.
தங்கள் வீட்டுக்குள் உருவாகியுள்ள குடும்ப அரசியல் பிரச்சனையை தமது விருப்புக்கேற்றவாறு முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய மகிந்த ஒரு விடயத்தைப் பகிரங்கப்படுத்தினார் – என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோதபாய சொல்லவில்லை, அவ்வாறு சொல்லவும் மாட்டார் என்பதே மகிந்தவின் கூற்று. இக்கூற்று பலவேறு அர்த்தங்களை உள்ளடக்கியது.
பொதுஜன பெரமுனவின் தலைவர் என்ற வகையில் கோதபாயவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற வைத்தது, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் முன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக்கொடுத்து நிலையான ஆட்சியை உருவாக்கியது எல்லாமே நானாக இருக்கையில் என்னை எவ்வாறு வெளியேற்ற முடியும் அல்லது வெளியேறுமாறு கேட்க முடியும் என்பதே மகிந்தவின் குரலின் உள்ளார்ந்த அர்த்தம். இதனை கோதபாய புரிந்து கொண்டுள்ளார் என்பது இப்போது பகிரங்கமாகியுள்ளது.
சூறாவளியாகியுள்ள அரசியல் நிலைவரத்தின்படி கோதபாயவும் மகிந்தவும் நீயா நானா என்ற பாணியில் போட்டியிடுவதாக பலரும் கருதுகின்றனர். எதிரணியினரின் கொட்டத்தை அடக்க இவர்கள் இருவரும் இவ்வாறு நாடகமாடுவதாக விடயம் அறிந்தவர்கள் எண்ணுகின்றனர்.
இவர்களை இருள்காலம் சூழ்ந்த ஆட்சியிலிருந்து வெளியேற்றக்கூடிய பலம் உள்ளவர்களாக எதிர்க்கட்சியினர் காணப்படவில்லை. பல்வேறு அணிகளாக பிளவுபட்டிருக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் விடயத்தில்கூட ஒன்றுபட்டவர்களாக இல்லை.
இவ்விடயத்தில் தமிழர் தரப்பும் அவ்வாறே உள்ளது. தமிழ்த் தேசியம் என்பதை தங்கள் கட்சிகளின் பெயரில் கொண்ட பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐந்து அல்லது ஆறு அணிகளாக பிரிந்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள தமிழரசு, ரெலோ, புளொட் ஆகியவை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடுவதில்கூட ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லை.
இந்தச் சூழ்நிலையில் நிகழ்கால போராட்டங்களைத் தொடரவிட்டு மீண்டும் தாங்கள் விரும்பும் அதே முன்னைய ஆட்சியை சுலபமாக கொண்டுவர முடியுமென்ற நம்பிக்கையில் ராஜபக்ச குடும்பம் திடமாக உள்ளதுபோல் தெரிகிறது.
இன்றைய பிரச்சனைகளின் மூலகர்த்தாவான பசில் ராஜபக்சவின் அசாதாரண மௌனம், நூற்றுக்கணக்கான சந்தேகங்களுக்கு பதில் தேட வைக்கிறது.
மக்கள் எழுச்சியை ஏமாளியாக்கும் ஷபட்ச|முள்ள ஷராஜ|குடும்பத்தின் சடுகுடு அரசியல் விளையாட்டை, காலிமுகத்திடலும் அதன் பின்னாலுள்ள ஷவல்ல|சக்தியும் அடையாளம் கண்டு நிர்மூலமாக்கத் தவறின், அறுபத்தொன்பது லட்சம் சிங்கள மக்கள் தங்களுக்கொரு முள்ளிவாய்க்காலை அனுபவ ரீதியாக தரிசிக்க நேரலாம்.