November 21, 2024

காங்கிரஸ் உண்மை சொல்ல வேண்டும்!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆட்சிமாற்ற முயற்சிகளை அமெரிக்கா ,இந்தியா போன்றவை முன்னெடுக்கும் சிங்கள தேச விடயங்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்வது வழமையாகும்.

ஆனால் தற்போது ஜக்கிய மக்கள் சக்தி அலுவலகத்திற்கு தேடிச்சென்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டதன் மூலம் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா என்பதை தெளிவுபடுத்தவேண்டுமென கோரிக்கையினை முன்வைத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுரேஸ்பிறேமசந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுரேஸ்பிறேமசந்திரன் ஆட்சி மாற்றத்தின் பின்னராக என்ன செய்வதென்பது தொடர்பில் சஜித் பிறேமதாசவுடன் பேசிய பேரங்கள் தொடர்பில் இனியாவது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வாக்களித்த தமிழ் மக்களிற்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக ஆட்சி மாற்றம் நடந்தேறினால் புதிய அமைச்சரவையினை சஜித் அமைப்பாராவென்பது கேள்வியாகவே உள்ளது.

எனினும் சஜித் பிறேமதாசவுடன் வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பேச்சுக்களை நடத்தியதாவென்பது தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.

ஆனாலும் எதிர்கட்சியுடன் தொடர்புபட்ட மலையக கட்சிகளோ,முஸ்லீம் கட்சிகளோ அல்லது கூட்டமைப்பு கூட இதுவரை நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒப்பமிடவில்லை.

ஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஓடோடி சென்று ஒப்பமிட்டுள்ளமை தன்னை துட்டகெமுனுவின் பரம்பரையாகவும் சிங்கள பௌத்த தேசத்தை காப்பாற்ற வந்த வீரனாகவும் தென்னிலங்கையில் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கு இனவாத பிரச்சாரங்களை முன்னெடுக்க உதவலாமென்பதை மறுதலிக்கமுடியாது.

ஒருபுறம் தானும் சாணக்கியனும் அமைச்சர்களாவது பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களது நகர்வுகளும் தன்னிச்சையானவையாகவே உள்ளது.

தற்போதைய தென்னிலங்கை சூழலில் தமிழ் தரப்புக்கள் சிந்தித்து பரஸ்பரம் பேச்சுக்களை நடாத்தி பொது இணக்க அடிப்படையில் செயற்படுவது காலத்தின் தேவையாகுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert