November 21, 2024

விவசாயத்தையும் வடகிழக்கில் முடக்குகிறனர்!

இலங்கை பொருளாதாரம் குறித்து வேதனைப்படும் நீங்கள்  யாராவது  கடந்த 13 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகள் பற்றி  சிந்தித்து இருக்கிறீர்களா ? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி சமுதாய பதிவாளர் ஒருவர்!

வடக்கு கிழக்கில் 40 வீதமான மக்கள் விவசாயத்துறையை  மட்டும் நம்பி இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள  பிரதான விவசாய பண்ணைகள் பலவும் இன்றளவும்  இலங்கை இராணுவ கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது 

நீர்ப்பாசனத்தை பெற்று கொடுக்க வேண்டிய 20 % -25 % ஆன விவசாய குளங்களை கூட இன்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என பலரும்  தொடர்ச்சியாக  உரிமை கொண்டாடுகின்றார்கள்

மகாவலி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் என்றைக்குமே பயன் பெறாத முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு  மாவட்ட விவசாய காணிகளை கூட மகாவலி அபிவிருத்தி சபை அபகரிக்கின்றது 

அதே போன்று மணலாறு , மட்டக்களப்பு, திருகோணமலை , வவவுனியா போன்ற மாவட்டங்களில் உள்ள எல்லை கிராமதுக்குரிய   தமிழ் விவசாய காணிகளை அபகரித்து சிங்கள மக்களை சட்டவிரோதமாக குடியேற்றுகின்றார்கள் 

இது போதாதென்று முன்னாள் போராளிகளை பொருளாதாரம் சார்ந்து மாற்றுத் தெரிவில்லாமல் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள  பண்ணைகளில் வேலை செய்தால் தான் பிழைக்கலாம் என்ற சூழலை திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கின்றார்கள் 

சரி, இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் உதவியுடன்  வாடைக்காற்று நேரம் வடக்கு கடலை ஆக்கிரமித்து வந்து வாடியடித்து தொழில் செய்து விட்டு சோழக காற்று நேரம் திரும்பி போகும் தென்னிலங்கை மீனவர்களை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? 

கொக்கிளாய், நாயாறு எல்லைப் பிரதேசம், தலைமன்னார் பியர், சவுத்பார், சிலாபத்துறை என கரையோர பிரதேசங்கள் எல்லாம்  தென்னிலங்கை மீனவர்கள் ஆக்கிரமித்து நிற்கின்றார்கள் 

தென்பகுதி மீனவர்களுக்குத்தான் ஆழ்கடலில் மூழ்கி அட்டை பிடிப்பதற்கான அனுமதியை  வழங்குகிறார்கள் 

இன்றும் எல்லா மீன்பிடி துறைமுகங்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் தான்  இருக்கிறது

கொஞ்சம் விடப்பட்டு இருக்கும் மயிலிட்டித்துறைமுகம் கூட தென்னிலங்கை மீனவர்களின்  ஆதிக்கத்தின் கீழ் தான்  இருக்கின்றது

அதே போல  விலங்கு வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கும்  சாதாரண மக்கள்  மேச்சல் தரைகளை பெற்று கொள்ளுவதில் கூட நெருக்கடிகள் இருக்கின்ற  விடயங்களை பற்றி அறிந்து இருக்கிறீர்களா ?  

வனவள திணைக்களம் முதல் இராணுவம் வரை மேச்சல் தரை விவகாரங்களில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் பற்றி எல்லாம் உங்களுக்கு அக்கறை இருக்கிறதா ? 

மட்டக்களப்பில் மட்டும் கடந்த ஆண்டு 200,000 மாடுகள் பாதை தவறி இருக்கின்றது . 

விலங்கு வேளாண்மையயை வாழ்வாதாரமாக கொண்ட மிக சாதாரண மக்களின் நிலையை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் 

முதலீடுகள் என்கிற பெயரில்  அரசாங்கத்தின் அனுமதியுடன் இராணுவம் பாதுகாப்பு வழங்க வடக்கு கிழக்கு பகுதிகளில் நடக்கும் வேலைகள் தெரியுமா ? 

மிக அண்மையில் பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 3, 000 ஏக்கர் காணிகளை சீனா நிறுவனத்துக்கும், அவர்களுடன் தொடர்புடைய  சிங்கள வியாபாரிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன 

இது போதாதென்று யாழ்ப்பாணம் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியன்  நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது 

இது பற்றி எல்லாம் உள்ளூர் சிவில் சமூகத்திடம் எந்தவித்த கருத்துக்களும் பெறப்படுவதில்லை . இது பற்றி எல்லாம் உங்களுக்கு அக்கறை இருக்கின்றதா ? 

மறுபுறம் முதலீடுகள் நோக்கி  புலம்பெயர் தேசத்தில் இருந்து அனுப்பப்படும் பணம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்படுத்தும் நெருக்கடிகள் தெரியுமா ? 

உங்களுக்கு தெரியுமா ? SMART வகுப்பறைகள்,  நவீன தொழில்நுட்ப ஆய்வு கூட வசதிகள் (Laboratory) , கணனி கூடங்கள் (Computer Labs), விளையாட்டு உபகரணங்கள் , கழிப்பட வசதிகள் (Sanitary Unit) உடபட அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் எங்கள் பகுதிகளில்  இன்றும் இருக்கின்றன 

சிங்கள மொழியில் Draft செய்யப்பட்டு தமிழ் ஆங்கில மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் பாட புத்தகங்களின் கனதியில் வேறுபாடு இருக்கிறது. 

அத்துடன் பாடநூல்களில் காணப்படுகின்ற கருத்துப் பிழைகள், எழுத்துப் பிழைகள், பிழையான தகவல்கள், பொருத்தமற்ற விடயங்கள், மூடிமறைப்புகள், போன்ற பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது

இந்த விடயங்களை கையாள வேண்டிய மத்திய கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவு மிக மோசமான ஆளணி குறைபாட்டுடன் இயங்கி வருகிறது.. இது பற்றி எல்லாம் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா ? 

உலகில் எங்காவது இராணுவம்  சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஊடக  முன்பள்ளிகளை நடத்துவது பற்றி அறிந்து இருக்கிறீர்களா ? 

இது போதாதென்று கிழக்கு மாகாணத்தின் அரச நிர்வாகத்தை முழுமையாக சிங்கள மையப்படுத்தி வைத்து இருக்கின்றார்கள் 

வடக்கிலும் அதையே செய்ய முயலுகின்றார்கள் .  

Merit basis இல்லாத சிற்றுளியார் நியமனங்களுக்கு கூட தென்னிலங்கையில் இருந்து ஆட்களை அனுப்புகின்றார்கள் .. இது எல்லாம் நியாயமானதா ? 

கடந்த காலங்களில் அம்மாச்சி உணவகத்திற்கு  தமிழில்  பெயர் வைக்க முடியாமல் நடந்த அவலங்கள் பற்றியாவது வாசித்து இருக்கிறீர்களா ?

வடக்குக்கு கிடைத்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு கூட கடந்த ஆட்சி காலத்தில் நடத்த அவலங்கள் தெரியுமா ? 

போருக்குப் பின்னரான சூழலில் கூட குறிப்பாக ‘வாழ்ந்தால் போதும்’ என்ற மனநிலைக்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் வகையில் – அவர்களுடைய நாளாந்த ‘இருத்தல்’ (Existence) பற்றி மட்டுமே அவர்களை சிந்திக்க, செயலாற்றக் கூடிய வகையில் அவர்களது அரசியல் கூட்டு மனநிலையை தாழ்த்தும் நோக்கில் கடந்த 13 ஆண்டுகளாக தொடரும் சில பொருளாதார விடையங்களை மட்டுமே மேல தொகுத்து இருக்கின்றோம் 

ஆகவே தமிழ் மக்களை  பொறுத்தவரை தென்னிலங்கை கட்சிகள் பேசும் அரசியல் பேரினவாதம் தான்.

இதற்கு முதலும் ராஜபக்சக்களை கண்டிருக்கிறோம்,

இனியும் வருவார்கள்

வெறுமனே   ராஜபக்சே எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டு இருப்பதில் எந்த தீர்வும் வரப்போவதில்லை 

தமிழர்களை பொறுத்தவரை ராஜபக்சே குடும்பம் வீட்டுக்கு அல்ல தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு அனுப்ப பட வேண்டும் 

அதே நேரம்  வெறும் ஆள் மாற்றங்கள் மேற்குறிப்பிட்ட தமிழ் மக்களின் அடிப்படையான பொருளாதார நெருக்கடிகளுக்கு கூட எந்த தீர்வையும் தர போவதில்லை 

அரசியல் கட்டமைப்பு மாற்றமே இன்றைய தேவையாக இருக்கிறது . 

அரசியல் கட்டமைப்பு மாற்றத்திற்கு தென்னிலங்கை தயாராக இருக்கின்ற போது இணைந்து கொள்ள தமிழ் சமூகம் ஒரு போதும் பின் நிற்க போவதில்லை 

ஆனால் இன்றைய நிலையில் அரசியல் கட்டமைப்பு மாற்றத்திற்கு தென்னிலங்கை தயாரா என்பதில் தான் கேள்வி இருக்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert