ஞாயிற்றுக்கிழமை போராட்டம் பிற்போடப்பட்டது!
நாளை ஞாயிற்றுக்கிழமை, யாழ்.பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த கண்டனப் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தனால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினை இலக்கு வைக்க சதிகள் பின்னப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போராட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு காரணமான அரசின் அப்போதய ஜனாதிபதி (தற்போதய பிரதமர்) கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2022.03.20ஆம் திகதியன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் ஜனநாயக வழியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போராட்டத்திற்காகச் சென்றிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களைச் சேர்ந்த வயது முதிர்ந்த தாய்மார்கள் மற்றும் பெண்கள் மீது சிறிலங்கா பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தி, அவர்களில் சிலரது ஆடைகள் கிழிக்கப்பட்டதுடன், காயப்படுத்தப்பட்டுமிருந்தமைக்கெதிராகவே போராட்டம் முன்னெடுக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது