இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருவது தொடருமா?
இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றியிருக்கும் நிலையில், மன்னாரில் இருந்து பல தமிழர்கள் படகின் மூலம் தமிழ்நாட்டிற்கு வர ஆரம்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பகுதியில் என்ன நடக்கிறது?
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நாட்டின் பல தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே விளிம்பு நிலையில் இருப்பவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.இந்த நிலையில்தான் கடந்த 21ஆம் தேதியன்று மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து ஆறு பேர் ஒரு பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடியை அடுத்துள்ள மணல் திட்டு பகுதியில் வந்து இறங்கினர். இவர்கள் இந்தியக் கடலோரக் காவல்படையால் மீட்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து வவுனியாவை சேர்ந்த ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் செவ்வாய்க் கிழமை இரவு தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, அங்கிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு படகின் மூலம் இந்தியாவுக்கு வருபவர்கள் அகதிகளாகக் கருதப்படமாட்டார்கள் என்றும் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில்தான் கடந்த வாரம் 10 பேர் படகு மூலம் தமிழ்நாட்டை வந்தடைந்திருப்பது இரு நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதில் கைக் குழந்தையுடன் தமிழ்நாட்டை வந்தடைந்த கஜேந்திரன் மேரிகிளாரா என்ற இளம் தம்பதியைப் பொறுத்தவரை பொருளாதாரக் காரணங்களே அவர்களை இந்த நிலையை நோக்கித் தள்ளியுள்ளன.இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் சந்திரகுமார் – ரேவதி சிசிலியா தம்பதியின் மகள்தான் மேரிகிளாரா. தன் மகளை தொடர்ந்து தான் எச்சரித்தும், வாழ வழியில்லாத நிலையில் அவள் திடீரென படகின் மூலம் இந்தியாவுக்குச் சென்றுவிட்டதாகவும் சொல்கிறார் மேரியின் தாயாரான ரேவதி சிசிலி.கஜேந்திரன் என்பவர் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்து வந்தபோது அங்கிருந்து படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து ஈரோடு அரச்சலூர் முகாமில் தங்கி இருந்தார். அங்கிருந்தபோதே மேரி கிளாராவுடன் காதல் ஏற்பட 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடல் வழியாக இலங்கைக்கு வந்து மேரி கிளாராவை திருமணம் செய்துகொண்டார்.ஆனால், மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் கஜேந்திரனால் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் மீண்டும் இந்தியா செல்ல விரும்பியிருக்கிறார் அவர். ஆனால், கஜேந்திரனுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், தங்கள் நான்கு மாதக் குழந்தையுடன் படகின் மூலம் இந்தியாவுக்குச் சென்றனர் இந்தத் தம்பதி.“அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தனர். ஆனால், அவர்கள் வாங்கிய சம்பளம் குழந்தைக்கு பால் மாவு வாங்கக்கூடப் போதவில்லை. இதனால், மறுபடியும் படகின் மூலம் இந்தியாவுக்குப் போக விரும்பினார் கஜேந்திரன். இதை என்னிடம் மகள் வந்து சொன்னபோது, நான் போகக்கூடாது என வலியுறுத்தினேன். திடீரென ஒரு நாள் புலனாய்வுத் துறையினர் வந்து, எங்களுடைய மகனும் மருமகனும் இந்தியா சென்றுவிட்டதாக புகைப்படத்தைக் காண்பித்துக் கூறினர். அப்போதுதான் அவர்கள் இந்தியாவுக்குப் போனது தெரியவந்தது.“ என்கிறார் ரேவதி.
வறுமையே அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது என்கிறார் மேரியின் தந்தையான சந்திரகுமார் கொன்ராட்.“நான் செருப்பு வாங்கிவந்தால் எவ்வளவு என்று கேட்பார். நான் 1200 ரூபாய் என்று சொல்வேன். இந்தியாவில் இதெல்லாம் 150 ரூபாய்க்குக் கிடைக்கும் என்பார். அதேபோல, பால் மாவு விலையையும் ஒப்பிடுவார். இந்தியாவில் விலை குறைவு என்பார். என்ன செய்வது, வேலை பார்த்து சமாளித்துதான் ஆக வேண்டும் என்பேன். ஆனால், வறுமை அவர்களைத் துரத்த, வாழ வழியின்றி அவர்கள் வெளியேறிவிட்டனர்“ என்கிறார் சந்திரகுமார் கொன்ராட்.கஜேந்திரன் ஏற்கனவே இந்தியாவில்தான் இருந்தவர் என்பதால் நீண்ட நாட்களாகவே இந்தியா திரும்பும் மனநிலையில் இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. ஆனால், மற்றவர்களைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது.இந்தக் கடற்கரைப் பகுதியிலிருந்து தமிழகக் கடற்கரை மிக அருகில் என்பதாலேயே, இந்தியாவுக்கு படகு மூலம் வரவிரும்புபவர்கள் மன்னார் பகுதியைத் தேர்வுசெய்கிறார்கள்.மன்னார் பகுதியில் நிலவரம் என்ன?அனைத்துப் பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட மன்னார் தீவில் மீன்பிடித்தல்தான் பிரதான தொழில். சுமார் 30 கி.மீ. நீளமும் ஐந்து கி.மீ. அகலமும் கொண்டுள்ள இந்தத் தீவில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் மீன்பிடித் தொழிலையே சார்ந்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் டீசல் தட்டுப்பாடும் பொருட்களின் விலை உயர்வும் மீன்பிடித் தொழிலைக் கடுமையாக பாதித்திருக்கிறது.மீன்பிடி படகுகளுக்கான மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு, மீன்களை பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கான டீசல் தட்டுப்பாடு, அவற்றை வாங்கவரும் மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு ஆகியவை ஒரு சங்கிலித் தொடராக இந்தத் தொழிலை இப்போது பாதித்திருக்கின்றன.நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் மீன் பிடித் தொழிலைத் தடையின்றித் தொடர்வதற்கு ஏற்றவகையில் எரிபொருள்கள் கிடைத்தால், யாரும் நாட்டைவிட்டு வெளியேற விரும்பமாட்டார்கள் என்கிறார் மீனவர் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவரான சவுரியான் ஜூட்சன்.“இந்தப் பகுதியைச் சேர்ந்த இருவர் வெளியேறியதை அடுத்து பலருக்கும் அவ்வாறு தோன்றலாம். ஆனால், வாழ்வதற்குப் போதுமான ஏற்பாடுகள் கிடைத்தால் எல்லோரும் இங்கேதான் இருக்க விரும்புவார்கள். படகுகளுக்கு மண்ணெண்ணெய் வேண்டும். வாகனங்களுக்கு டீசல் வேண்டும். இல்லாவிட்டால் பிடித்த மீனை விற்கக்கூட முடியாது. அரசு அந்தத் திசையில் கவனம் செலுத்துமென நம்புகிறேன் என்கிறார்“ ஜூட்சன்.பெரும் எண்ணிக்கையில் மக்கள் வெளியேறுவதற்கான சூழல் தற்போது இல்லையென்றாலும், மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்னைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்கின்றனர் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.