November 22, 2024

அமைதிப்படை ஜெய்சங்கரே அனைத்தும்?

இந்திய அமைதிப்படைகாலத்தில் ஆலோசகராக இருந்த ஜெய்சங்கரே தற்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சரென அம்பலப்படத்தியுள்ளார் மூத்த ஊடகவியலாளர் நிக்சன்.

இந்திய இராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றிய ஜெய்சங்கர், உணவுக் கப்பலுடன் யாழ்ப்பாணம் வந்த பூரி என்ற இருவரும் 1987 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்திலேயே இராஜதந்திரிகளாகப் பணிபுரிந்தனர். இந்த அனுபவப் பின்புலத்திலேயே வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற நாள் முதல், ஜெய்சங்கர் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றார். அத்துடன் ராஜபக்ச அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ கட்சியும் 13 ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நரேந்திரமோடிக்குக் கடிதம் ஒன்றை ஜனவரி மாதம் 13 ஆம் திகதி அனுப்பியிருக்கவும் வேண்டும். ஜெய்சங்கர், பெற்றோலிய வள மற்றும் எரிசக்தி அமைச்சராக இருக்கும் பூரி ஆகியோரின் முயற்சியினாலேயே கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி தமிழ்பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் மேலும் ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குக் குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. இந்தியா சொல்வதைக் கேட்பதைவிட ஈழத்தமிழ் மக்களுக்குத் தேவையான அரசியல் தீர்வு உள்ளிட்ட போரின் பக்க விளைவுகளுக்குரிய தீர்வுகள் பற்றியும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருந்தால், விரும்பியோ விரும்பாமலோ இந்தியா ஈழத்தமிழர்களின் பக்கம் நின்று குறைந்த பட்ச சமஸ்டி ஆட்சி முறைக்கான அழுத்தங்களையாவது கொடுத்திருக்கும் நிலை நேரிட்டிருக்கலாம். ஜெய்சங்கர் போன்ற இராஜதந்திரிகளைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் தலைவர்கள் ஆரம்பம் முதலே பயன்படுத்தியிருந்தால் இந்தியாவைக் கையாண்டிருக்கலாம். ஆனால் இலங்கை அரசாங்கம் ஜெய்சங்கர் போன்றோரை நன்கு பயன்படுத்திக் காய் நகர்த்தியுள்ளது. தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் இந்தியாவிடம் கூட்டாகக் கோரிக்கை முன்வைக்கக் கூடாது என்பதைத் தடுக்கப் பிளவுபடுத்தும் உத்திகளை இலங்கை கையாண்டிருக்கின்றது. தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் ரசிய மொழியும் பேசும் ஆற்றல் உள்ள ஜெய்சங்கர், இந்திய வெளிநாட்டு இராஜதந்திர சேவையில் மூத்த இராஜதந்திரியாவார். ஆகவே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு இந்திய இராஜதந்திரிகள் சுமார் முப்பது ஆண்டுகளின் பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் நிக்சன்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert