November 24, 2024

செம்மணி நாயகிக்கும் கவலையாம்!

இலங்கை இன்று பொருளாதார ரீதியாக திவாலடைந்துள்ளது.  2004- 2015க்கு இடைப்பட்ட  ஆட்சிக்  காலத்தில் நாட்டை  ஆட்சி செய்த தலைவர்  பில்லியன், ட்ரில்ரியன் கணக்கில் கொள்ளையடித்த நிலையில் நாடு தற்போதைய நிலையை  அடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 தற்போது  நாடு கடன் சுமையை எதிர்நோக்கியுள்ள நிலையில், கொள்ளையடிப்பதற்காக மீண்டும் மீண்டும் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. மத்தள  விமான நிலையம் அமைக்கப்பட்டது.ஒரு விமானம் கூட வருவதில்லை. அம்பாந்தோட்டை  துறைமுகம் அமைக்கப்பட்டது. அது முற்று முழுவதுமான வேடிக்கை நிகழ்வு.  அவ்வாறான  திட்டங்களுக்காக  கோடிக் கணக்கில்  கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. அவற்றின் ஊடாக அவர்களது  சட்டைப் பையை நிரப்பிக் கொண்டனர். அவற்றுக்கான கடன்களை யார் செலுத்துவது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவற்றுக்கான கடன்களை அடைப்பதற்காக மீண்டும் மீண்டும் கடன் பெற்றுக்கொள்ளும்  போது  நாடு இன்று இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலைமையாலேயே  இன்று  எரிபொருள் நெருக்கடிக்கு  நாடு  முகம் கொடுக்கிறது. நாடு இருளில் உள்ளதுடன் மக்கள் உணவின்றி பட்டினியில் உள்ளனர்.

இவ்வாறான  மோசமான நிலை சிறிமாவோ ஆட்சிக் காலத்தில் கனவில் கூட  எப்போதும்  இடம்பெறவில்லை.அதனைத் தொடர்ந்து இவ்வாறான சூழ்நிலை  எனது ஆட்சிக் காலத்திலும் இடம்பெறவில்லை. நான் கொள்ளையடிக்கவும் இல்லை. யாருக்கும் கொள்ளையடிக்கவும் இடமளிக்கவில்லை  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தம் நிலவிய போதும் நாடு முன்னேற்றகரமான  அபிவிருத்திப்  பாதையிலேயே இருந்தது.  1994 ஆம் ஆண்டு  நான்  ஆட்சிக்கு வந்த போது  200  வறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 25ஆவது இடத்தில் இருந்தது. எனது 11 வருட  ஆட்சி   நிறைவடையும் போது இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும்  72 நாடுகளின்  பட்டியலில் ஒன்றாக  இருந்ததது எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது சிறந்த ஆட்சி நிலவியதுடன், முடிந்தளவு கொள்ளையடிக்கும் நிலை குறைக்கப்பட்டது.அப்போது நிலையான  பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையே அதற்குப் பிரதான காரணம். இருப்பினும்  தற்போது  அவ்வாறான நிலையைக் காணக்கூடியதாக இல்லை  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தை உள்ளடக்கிய  புகைப்படங்கள் மற்றும் தகவல்களைக்  கொண்ட  புத்தகமானது நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க இவ்வாறு   தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert