மனித உரிமைகள் பேரவையின் 13 ஆண்டுகால முன்னெடுப்புகள் கற்றதும் பெற்றதும் என்ன? பனங்காட்டான்
கடந்த வருட மார்ச் மாத 46:1 இலக்கத் தீர்மானத்தை ஒரு வருடத்துள் இலங்கை அரசு எவ்வாறு அணுகியது, எந்தளவுக்கு முன்னெடுத்தது, எவற்றை நடைமுறைப்படுத்தியது, அதனுடைய நம்பகத்தன்மை என்ன, செய்யத் தவறியவை என்ன, தொடரும் மனித உரிமை மீறல்கள் – அராஜக பயங்கரவாத தடைச்சட்ட செயற்பாடுகள் போன்றவைகளை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதே 49வது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளரின் கடமை.
வழக்கம்போல வருடத்துக்கு மூன்று தடவை வந்துபோகும் ஜெனிவாக் காலம் இது. முள்ளிவாய்க்காலில் அனைத்தும் உறைநிலைக்குச் சென்ற பின்னர் ஜெனிவாவே எம்மவர்க்கு ஆடுகளமாகியுள்ளது.
போர்க்கால மனித உரிமை மீறல்கள், பொறுப்புக்கூறல், சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை என்பவையே ஜெனிவா அரங்கு இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வரும் அம்சங்கள்.
கடந்த வருடம் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46:1 இலக்கத் தீர்மானத்தையொட்டிய விடயங்கள் 48ம் 49ம் 51ம் அமர்வுகளில் படிப்படியாகக் கையாளப்படும் என்பது அடிப்படைத் தீர்மானத்தின் முக்கிய அறிவிப்பு.
இதன் பிரகாரம் கடந்த வருட இறுதி அமர்வின்போது மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் இது தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்தார்.
இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, நிலைபேறான அபிவிருத்தி என்பவைகளில் பொறுப்புக் கூறல் வலுவிழந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது என இவர் இந்த அறிக்கையில் சுட்டியிருந்தார்.
அதேசமயம், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக இலங்கை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச தெரிவித்திருந்ததையும் ஆணையாளர் தமது அறிக்கையில் வரவேற்று, அதற்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு தனது அலுவலகம் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
அதேசமயம், இலங்கை எதிர்கொண்டிருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவ மயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்பதை முன்னிறுத்தி வெளிக்காட்ட ஆணையாளர் மறக்கவில்லை.
இராணுவ மயமாக்கல் என்ற சொல்லாடலே இவரது குறிப்பில் முக்கியமானது, நடைமுறை அணுகலைக் காட்டுவது, உண்மையானது. அதாவது கோதபாய ஆட்சியின் யதார்த்தப் போக்கை புட்டுக்காட்டுவதாக அமைந்தது.
அதன் காரணமாகவே, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளின் நம்பகமான முன்னேற்றங்கள் குறித்து பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை மீது மிக நெருக்கமாக அவதானம் செலுத்த வேண்டுமென்ற வேண்டுதலையும் ஆணையாளர் தெட்டத் தெளிவாக எடுத்துக்கூறினார். இதன் ஆங்கில வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது:
இலங்கை அரசு(கள்) தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு விடயங்களிலும் எவ்வாறு ஏமாற்றம் தரும் வகையில் நடந்து கொள்கிறது என்பதை ஆணையாளர் பச்சிலற் அம்மையார் நன்கறிந்து வைத்திருந்தார் என்பதை, இலங்கை மீது நெருக்கமாக அவதானம் செலுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் அவர் கேட்டுக் கொண்டார் என்பதற்கூடாக அறிந்து கொள்ளலாம்.
கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரே, அதாவது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இருக்கும்போதே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை தாம் அடியோடு நிராகரிப்பதாகக் கூறியதை இங்கு நினைவுபடுத்தினால், அவர் ஜனாதிபதி ஆகிய பின்னர் அவரது ஆட்சி நிர்வாகம் பேரவையின் தீர்மானங்களுக்கு எவ்வாறு மதிப்பளிக்கும் என்பதை புரிந்து கொள்வது இலகுவானது. இதுபற்றிக் கருத்து வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று அதன் செய்திக்கு பின்வருமாறு தலைப்பிட்டிருந்தது:
( (ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான கோதபாய ராஜபக்ச தேர்தலுக்கு முன்னரே மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில் ராஜதந்திர மட்டத்தில் மடத்தனமான இசகினைப் புரிந்துள்ளார்) என்று தெரிவித்திருந்தது. இன்றுவரை அவர் அதனைத் தொடர்வதையே பார்க்கக் கூடியதாக உள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது விவாதங்கள் இடம்பெறுதல், தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதல் என்பவை கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக இடம்பெறுபவையல்ல.
முள்ளிவாய்க்கால் அனர்த்தம் இடம்பெற்ற அதே மே மாத இறுதியில் குருசேத்திரமாக அமைந்த அந்த மண்ணுக்கு ஐ.நா.வின் செயலாளர் நாயகமாகவிருந்த பான் கி மூன் நேரடி விஜயம் செய்தார். அங்கு தாம் பெற்றுக் கொண்டவைகளின் அடிப்படையில் சிலவற்றை கிரகித்துக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சவும் அவரும் இணைந்து விடுத்த கூட்டறிக்கையே இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு வித்திட்டது என்பதை இப்போது ஆட்சித் தரப்பிலுள்ள இளையவர்கள் பலரும் தெரிந்திருக்க மாட்டார்கள்.
இதன் முதற்கட்டமாக தருஷ்மன் குழு விசாரணைக்கென நியமிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்போது மனித உரிமைகள் ஆணையாளராகவிருந்த நவநீதம்பிள்ளை போர்க்களத்தைப் பார்வையிடச் சென்றார். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அங்கு சென்று பல சான்றுகளையும் தரவுகளையும் பெற்றுக் கொண்ட அவர், அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றினை நடத்தினார்.
இலங்கை சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடே காணப்படுவதாக பகிரங்கமாக இவர் தெரிவித்த கருத்தினால் ஆட்சி பீடம் கொதித்தெழுந்தது. தென்னாபிரிக்கத் தமிழரான இவரை ஒரு கட்டத்தில் பெண் புலி என்று பட்டம் சூட்டவும் சிங்கள பௌத்தம் பின்னிற்கவில்லை.
இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதென்பதற்குச் சான்றாக ஆறு அம்சங்களை நவநீதம்பிள்ளை முன்வைத்தார்.
• சர்வதேச குற்றச்சாட்டுகள் குறித்த உள்ளக விசாரணையில் உண்மைத்தன்மை இல்லை.
• பள்ளிவாசல், தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து உரிய விசாரணை அவசியம்.
• அரசியல் கைதிகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையவில்லை.
• சர்வதேச குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆக்கபூர்வமான விசாரணைகளை அரசு வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் மேற்கொள்ளவில்லை.
• ராணுவத்துக்கெதிரான குற்றச்சாட்டுகளை ராணுவமே விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பது எந்த வகையிலும் நியாயபூர்வமானதாகவோ ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவோ அமையாது.
• இலங்கைப் படைகளுக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகையில் இது விடயத்தில் சாட்சியமளித்த வடக்கு கிழக்கு மக்களை அச்சுறுத்துவது நிலைமையை மேலும் மோசமடையவே செய்யும்.
ஆகவே, மனித உரிமைகள் உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசிய ரீதியிலான சுயாதீனமானதும், வெளிப்படையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளைத் தவிர இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகளைக் கண்டறிய வேறு பொறிமுறைகள் கிடையாது என்று நவநீதம்பிள்ளை அவர்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதே இப்போது நடைமுறைச் சாத்தியமாகியுள்ளது.
22:1 இலக்கத் தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டபோது இலங்கை அதனை உதாசீனம் செய்தது. மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்துக்கு இலங்கை இணைஅனுசரணை வழங்கியதாயினும் கோதபாய அரசு இந்தத் தீர்மானத்திலிருந்து இலங்கையை ஒருதலைப்பட்சமாக விலத்திக் கொண்டது.
தொடர்ச்சியாக 25:1, 30:1, 34:1, 40:1 என்று தொடர்ச்சியாக வந்த தீர்மானங்கள் எதுவும் பலனளிக்காத நிலையில் கடந்த வருட மார்ச் மாத அமர்வில் நிறைவேற்றப்பட்ட 46:1 தீர்மானம் முன்னையவைகளைவிட கனதியானது, இறுக்கமானது, போர்க்கால மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை பதிவுக்குட்படுத்துவது.
எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் சர்வதேச குற்ற நீதிவிசாரணைக்கு இலங்கையை உட்படுத்த இடப்படும் அத்திவாரமாக இலங்கை அரசு இதனைப் பார்க்கிறது. அதனால் சிங்கள பௌத்த மக்களை அரணாக தொடர்ந்து வைத்திருக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றவும் விதண்டாவாத உரைகளையும் அறிக்கைகளையும் கோதா தரப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த மாதம் 28ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் ஜெனிவா அமர்வை எதிர்கொள்ள தாங்கள் தயாராகவிருப்பதாகவும், ஜெனிவாவுக்கு அடிபணிய தாங்கள் தயாரில்லையென்றும், ஆணையாளரின் அறிக்கை இலங்கைக்கு சவால் அல்லவென்றும், புதிதாக எந்தத் தீர்மானமும் இந்த அமர்வில் வராது என்றும் முழு உண்மையை மறைத்து தப்பான தகவலை மக்களிடம் ஆட்சித் தரப்பு விதைக்க எத்தனிக்கிறது.
46:1 இலக்கத் தீர்மானத்தை கடந்த ஒரு வருடத்தில் இலங்கை அரசு எவ்வாறு அணுகியது, எந்தளவுக்கு முன்னெடுத்தது, எவற்றை நடைமுறைப்படுத்தியது, அதனுடைய நம்பகத்தன்மை என்ன, செய்யத் தவறியவை என்ன, தொடரும் மனித உரிமை மீறல்கள் – அராஜக பயங்கரவாத தடைச்சட்ட செயற்பாடுகள் போன்றவைகளை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதே 49வது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளரின் கடமை. புதிய தீர்மானம் எதுவும் அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்தது. பொய்யும் புரட்டும் கூறி நீண்டகாலத்துக்கு மக்களை ஏமாற்றக்கூடாது. ஏமாற்றவும் முடியாது.