யாழில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகோரி மக்கள் வீதிமறியல் போராட்டம்
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத தமது குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியினை மறித்து வீதியின் குறுக்கே பொதுமக்களும் மாணவர்களும் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போராட்ட இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் வீதியை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்த மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, மக்களுடன் போச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தீர்வுக்கான முயற்சிச்செய்தனர்.
அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார் உள்ளிட்டவர்கள் வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கலந்துரையாடினர்.
இதைதொடரந்து பிரச்சினைக்கு உரிய தீர்வினை உடனடியாக பெற்றுத் தருவதாக தெரிவித்தோடு, குடியிருப்பு பகுதிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டதனையடுத்து போராட்டம் நிறைவு பெற்றது.