November 22, 2024

பொறுப்பு கூறலை முடக்குவதற்கு தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம் – சட்டத்தரணி சுகாஷ்!

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளக விசாரணைகளையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள், பொறுப்பு கூறலையும் முடக்குவதற்கு தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம் என

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.

கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கட்சிகளை பொறுத்தவரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய, எங்களுடைய செயற்பாடுகள், மிகவும் நேர்த்தியாக இருக்கின்றது. ஏனென்றால், நாங்கள் உரிய காலத்தில், இலங்கையினுடைய நிலைப்பாடுகள் பற்றி உரிய வெளிப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றோம். 

மிக அண்மையில் கூட ஒரு வாரத்திற்குள் ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் பேரவையினுடைய இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அவர்களை எங்களுடைய கட்சியினுடைய தலைவர் மதிப்பார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் சந்தித்து தற்போதைய யதார்த்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

ஆகவே நாங்கள் காலத்துக்கு காலம், எங்களுடைய செயற்பாடுகளை உரிய வகையில் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால், துரதிஷ்டவசமாக ஏனைய தமிழ் தரப்புக்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் ஒவ்வொருவரும் செயற்படுகின்ற காரணத்தினால் தமிழ் மக்களினுடைய உண்மையான விடயங்களை பன்னாட்டு பிரமுகர்களுக்கு வெளிப்படுத்தாது தாங்கள் தாங்கி நிற்கின்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவது, கவலையான விடயமாகும்.

இதனால்தான் தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. அடுத்து புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளை பொறுத்தவரையில், சில அமைப்புகள் நேர்த்தியாக செயற்படுகிறார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால் இன்னும் பல புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளக விசாரணைகளையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள், பொறுப்பு கூறலையும் முடக்குவதற்கு, தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம். 

ஆகவே அனைவரும் ஒன்றுபட்ட குரலில், ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மாத்திரமே தீர்வைத் தரும் என்று வெளிப்படுத்துவது ஆரோக்கியமான ஈழ தமிழர்களுக்கு ஒரு விடுதலையையும், தீர்வையும் பெற்றுக்கொடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert