தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்வலம் !
கனிய மணல் கூட்டுதாபனத்தால் இல்மனையிட் அகழ்வுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய் தொடக்கம் செம்மலை கிழக்கு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கிளாய் கிராம மக்களால் இன்றையதினம் (12) கொக்கிளாய் இல்மனைட் கூட்டுத்தாபன பொறித்தொகுதிக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கொக்கிளாய் கிராம மக்கள் 16 பேருக்கு சொந்தமான 44 ஏக்கர் உறுதி காணிகள் மற்றும் அனுமதிப்பத்திர காணிகளை மக்களின் அனுமதியின்றி அபகரித்து வேலி அமைத்து கொக்கிளாய் இல்மனையிட் பொறித்தொகுதி (plant) அமைத்துள்ள கைத்தொழில் அமைச்சின் கீழான இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடட் அந்த செயற் திட்டத்தை விஸ்தரிக்கும் நோக்கோடு கொக்கிளாயிலிருந்து செம்மலை கிழக்கு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கையை கடந்த சிலவாரங்களாக இரகசியமாக முன்னறிவித்தல் எதுவுமின்றி முன்னெடுத்து வருகின்றது . இதன் முதற்கட்டமாக கொக்கிளாய் கிராமத்தில் கடந்த காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் மேட்டு காணிகள் ,குடியிருப்பு நிலங்கள் சேமக்காலை , குளம் போன்றவற்றை உள்ளடக்கி அளவீடுகளை மேற்கொண்டு எல்லைப்படுத்தும் நடவடிக்கையை நில அளவை திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது . இந்த நில அளவை நடவடிக்கை தற்போது கரையோரமாக கொக்குத்தொடுவாய் கிராமாம்வரை இடம்பெற்றுள்ளதோடு எதிர்காலத்தில் கடற் கரையோரத்திலிருந்து சுமார் 600 மீட்டர் அகலமும் 12 கிலோ மீட்டர் நீளமும் கொண்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை உள்ளடக்கி விஸ்தரிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்த காணி கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அளவீடு செய்யப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறுகோரியும் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படவிருக்கும் இல்மனையிட் அகழ்வு திட்டத்தை நிறுத்துமாறுகோரியும் கொக்கிளாய் எல்லை கிராம மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கொக்கிளாய் பாடசாலை முன்பாக ஆரம்பித்த இந்த எதிர்ப்பு போராட்டம் அபகரிக்கப்பட்டுள்ள நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்மனையிட் பொறித்தொகுதிவரை சென்று அங்கு எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எமது நிலமே எமது உரிமை , கொக்கிளாய் எமது பூர்வீகம் , கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் காணி பறிக்கவா இந்த திட்டம் , நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம் ,வளங்களை சுரண்டிவிட்டு எங்கள் நிலங்களை பறிக்கவா இந்த நாடகம் போன்ற கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் , கொக்கிளாய் பங்குத்தந்தையர்கள் , பொத்துவில் தொடக்கி பொலிகண்டி பேரெழுச்சி இயக்கத்தை சேர்ந்த வேலன் சுவாமி பொதுமக்கள் ஆர்வலர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.