November 22, 2024

P2P:இன அழிப்பு நிலைப்பாட்டில் உறுதி!

தேர்தல் அரசியல் கடந்த தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் மக்கள் இயக்கமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்வரை மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி போராட்டத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நேற்றாகும். ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னர் தமிழர் தாயகம் எங்கும்  கொந்தளித்த மாபெரும் எழுச்சிப்போராட்டமாக சமகால வரலாற்றில் இது இடம்பிடித்திருந்தது. பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தமிழினமே தன்னெழுச்சியாக பொங்கியெழுந்து தமது  நியாயமான  கோரிக்கைகளான மரபுவழித்தாயகம், சுயநிர்ணய உரிமை,  தமிழ்த்தேசியம் என்பவற்றையும் தமக்கான சர்வதேச நீதியினையும் வலியுறுத்தி நின்ற நாள். நீதிமன்ற தடை உத்தரவுகள், அச்சுறுத்தல்கள், கல்வீச்சுகள் என பல்வேறு தடைகளையும் தாண்டி, அரசியல் பாகுபாடுகளை புறந்தள்ளி தமிழினமே ஒருமித்து எழுந்து நின்ற தருணம். 

தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை என்பதனையே அடிநாதமாக கொண்டு இப்போராட்டம் கட்டமைக்கப்பட்டது. இதன்வழி தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் கூறுகளின் தாக்கங்களையும், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் உள்ளடக்கியதான பின்வரும் கோரிக்கைகளை இப்போராட்டம் வலியுறுத்தி நின்றது.

1) யுத்தம் நிறைவடைந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் வடக்கு-கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. வடக்கு-கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்தும் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான நில அபகரிப்புகளும், பெளத்த சிங்கள மயமாக்கல்களும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.     

2) தமிழர் தாயகம் எங்கும் நிலைகொண்டிருக்கும் சிங்கள இராணுவம் உடனடியாக அகற்றப்படுவதுடன், இயல்பு நிலை ஏற்படுத்தப்படவேண்டும். சிவில் நிர்வாகங்களில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுத்தல் உடனடியாக நிறுத்தப்படுவதுடன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.    

3) மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை, நடமாடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும். அத்துடன் தமிழர் தரப்பில் உருவாகும் விடுதலைக்கான தன்னெழுச்சியான அரசியல் வெளியினை ஒடுக்குவதில் சிங்கள பெளத்த பேரினவாத அரசு குறியாகவே உள்ளது. இவ்வாறான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.  

4) தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தும், பூர்வீக வாழ்விடங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பில் உள்ள தமிழ்ப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழ்ப் பூர்வீக நிலங்களில் வனங்கள் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான தமிழரின் வாழ்வாதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.   

5) தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக மீளக் கையளிக்கப்பட வேண்டும்.  

6) தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைத் தொடர்ச்சியாக மறுதலித்து வரும் இந்த சிங்கள பெளத்த அரசானது, தமிழர்களின் நினைவுத்தூபிகள், அடையாளங்களை அழிப்பதில் முனைப்பாகச் செயல்படுகின்றது. இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  

7) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பல வருடங்களாகத் தடுத்து வைத்துள்ளனர். இஸ்லாமியச் சகோதரர்களையும் இதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி தற்போது தடுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் யுத்த மற்றும் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

8) பல வருடங்களாகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.  

9) இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களைப் புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாக்களை இச்சிங்கள பெளத்த பேரினவாத அரசு எரியூட்டி வருகின்றது. இதற்கு எதிராகப் போராடும் முஸ்லீம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர். இந்நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு இஸ்லாமிய மக்களின் அடிப்படை மத உரிமை மதிக்கப்பட வேண்டும்.   

10) அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1000 ரூபாய் சம்பள உயர்வு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதுடன் அவர்கள் எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும்.

இதில் இஸ்லாமிய மக்களின் ஜனாசா எரிப்பு விடயம் தவிர்த்து வேறு எவ்வித கோரிக்கைகளும் ஒரு வருடம் கடந்த பின்பும் நிறைவேற்றப்படவில்லை. சிங்கள பேரினவாத அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் என நாம் ஒருபோதும் நம்பவில்லை. ஆயினும் சர்வதே சமுதாயத்திற்கு எமதினத்தின் தற்போதைய நிலைப்பாட்டினையும் எவ்வாறான அடக்குமுறையின் கீழ் உள்ளோம் என்பதனையும் வெளிக்கொண்டு வரவுமே இதனை முன்வைத்தோம். 

எமது தாயக பூமியை சிங்கள பேரினவாதம் தொடர்ச்சியாகவே நேரடியாகவும் மறைமுகமாகவும் விழுங்கிவருகிறது. எங்களது பாரம்பரிய வழிபாட்டிடங்களில் புத்தவிகாரைகள் முளைக்கின்றன. தமிழர் தேசமெங்கும் சிங்கள குடியேற்றங்கள் முளைக்கின்றன. இதனூடாக எமது இனப்பரம்பல் மாற்றியமைக்கப்படுகின்றது. இதனூடாக நாம் ஒரு தேசிய இனம் என்பதை இல்லாது செய்வதற்கு சிங்களப்பேரினவாதமானது தொடர்முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை முறியடித்து எமது இனத்தையும் நிலத்தையும் எமது பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. இதற்காக நாம் அனைவரும் கட்சி அரசியலை கடந்து தமிழராக ஒன்றுபட வேண்டும். எங்கள் இளைய சந்ததியினர் எமது இனத்தின் தற்போதைய நிலையினை உணர்ந்து தமிழினத்தின் தேசிய போராட்டத்தினை கையேற்க வேண்டும். நாம் ஒரு தேசமாக எழுந்து நிற்கும் போதே எமது விடுதலை சாத்தியமாகும். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சியின் பிறப்பாக உருவெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் கடந்த ஒரு வருடமாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் உறுதியெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பிரகடனமான 

„தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான  

மரபுவழித் தாயகம்

சுயநிர்ணய உரிமை

தமிழ்த்தேசியம்  

என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும்.  

அத்துடன் தமிழ் இனத்தின் மீது மேற்கோள்ளப்பட்ட, தொடர்ச்சியாக மேற்கோள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்.“

என்பதன் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். தற்போதைய காலகட்டத்தில் தேர்தல் அரசியலை கடந்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் மக்கள் இயக்கம் ஒன்றின் தேவை தமிழ் தேசிய பரப்பில் உணரப்பட்டுள்ளது. படிமுறை வளர்ச்சி கண்டுவரும் எமது இயக்கத்தினை மேலும் வலுப்படுத்தவும், எமது தேசிய போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கவும் தமிழ் மக்களின் அனைத்துத்தரப்பினரும், குறிப்பாக இளையோர்கள் மற்றும் மாணவர்கள் எம்மோடு கரம் கோர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert