சந்திரிகாவினதும் துணைகளதும் கொலைகள்!
சமாதானப்புறாவென கூட்டமைப்பு தரப்பாலும் தென்னிலங்கை அரசசார்பற்ற அமைப்பின் தலைவர்களாலும் கொண்டாப்பட்டுவருகின்ற சந்திரிகா அரங்கேற்றிய கொழும்பு கொலைகளை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த ஊடகவியலாளர்கள் விக்ரர் ஜவன்.
சந்திரிகாவின் பாதுகாப்புக் குழுவின் நம்பிக்கைக்குரிய சக ஊழியரான பெத்தகன சஞ்சீவ, அலரிமாளிகையின் மடியில் வைத்து வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளையாகவே கருதப்படுகிறார். அவர் அலரி மாளிகையில் இருந்து பாதாள உலகத்தை ஆட்சி செய்தார். சந்திரிகா அல்லது அவரது நெருங்கிய சகாக் களின் கட்டளையின் பேரில் தனியாட்களை அடக்கி துன்புறுத்தும் திட்டங்களை அவர் செயற் படுத்தினார்.
பழம்பெரும் பாடகர்களான ரூகநாத குணதிலக மற்றும் சந்திர லேகா சம்பவமும் அத்தகைய ஒரு உதாரணம். நடிகை அனோஜா வீரசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்தமை, லசந்த விக்ரமதுங்கவின் வீடு மீதான தாக்குதல் என்பன வேறு இரண்டு உதாரணங்களாகும். சர்ச்சைக்குரிய பத்திரிகையான சட்டன பத்திரிகையின் ஆசிரியர் ரோஹண குமார படுகொலை செய்யப்பட்டமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலத்தின் தந்தை குமார் பொன்னம்பலத்தின் படுகொலை தொடர்பில் பெத்தகன சஞ்சீவவின் நிழல் படர்ந்திருந்தது.
குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு காரணமான மொரட்டுவ சமன், பிரபல குற்றவியல் வழக்கறிஞர் தயா பெரேராவிடம் இதனை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பின்னரே மொரட்டுவ சமன் கொல்லப்பட்டார். ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும், முன்னைய ஐ.தே.க ஆட்சிக் காலத்திலும் நடந்த மோசமான சம்பவங்கள் சந்திரிகாவின் ஆட்சியிலும் நடந்துள்ளன என்பதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன எனவும் விக்ரர் ஜவன் தெரிவித்துள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையும் இவ்வாறே முன்னெடுக்கப்பட்டிருந்தது.அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுடன் தனிப்பட்ட நட்பை பேணிய தராகி மறுபுறம் அப்போதைய தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இருந்த ஹெந்தவிதாரண ஆகக்குறைந்தது ஒரு முன்னெச்சரிக்கையினையேனும் தருவார் என நம்பியிருந்தார்.
ஆனாலும் துரதிஸ்டவசமாக அவை எவையுமே பலனளிக்காத நிலையில் துணை ஆயுதக்குழுவாக செயற்பட்ட புளொட் அமைப்பினரால் உத்தரவு சிரமேற்கொள்ளப்பட்டு தராகி சிவராம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆனாலும் புலனாய்வு உள்ளக தகவல்கள் பிரகாரம் தராகி சிவராமின் கொலைக்கான முக்கிய கையாக அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரது கரங்கள் இருந்தமை அதிர்ச்சியை தந்தது.
எனினும் தாhகி சிவராம் ஏப்ரலில் கொல்லப்பட மூன்று மாதங்களின் பின்னராக லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் விடுதலைப்புலிகளது சினைப்பர் அணியினரால் கொல்லப்பட்டதாக அரசு குற்றஞ்சுமத்தியிருந்தது.
அதேவேளை தராகி சிவராம் கொலையை அரங்கேற்றிய புளொட் துணைப்படை முகவர்கள் பாதுகாப்பாக போலி பெயரில் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
யுத்த முடிவின் பின்னர் அவர்கள் நாடு திரும்பிய கொலையாளியென அடையாளப்படுத்தப்பட்ட ஆர்.ஆர் என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட ஆர்.இராகவன் தராகி சிவராமினால் தோற்றம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டங்களில் மேடையில் அமர்ந்திருக்கின்ற பிரமுகர்களானது காலத்தின் கோலமே.
அதேபோன்றே சமாதான தேவதை சந்திரிகா மீண்டும் இரண்டாவது தடவையாக பதவியேற்ற போது அமைச்சு கதிரையேறிய அதேநாளில் மற்றொரு துணைக்குழுவான ஈபிடிபியின் தலைவரான டக்ளஸினால் மற்றொரு ஊடகவியலாளன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
ஊடகவியலாளன் ஒருவனை தேசத்திற்கு தந்தமையால் நிமலராஜனின் குடும்பமும் வீசப்பட்ட கைக்குண்டொன்றினால் காயமடைந்து நட்டாற்றில் விடப்பட்டிருந்து.
நிமலராஜன் மட்டுமல்ல சிவராம் முதல் பல ஊடகவியலாளர்களை கொலை செய்ய இலங்கை புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட கட்டளைகளை தனது கொலையாளிகள் மூலம் முன்னெடுத்திருந்தார் டக்ளஸ் தேவானந்தா.
தன்னை அதி உத்தமனாக காண்பித்து தற்போதும் கதிரைகளில் திரியும் டக்ளஸிற்கு இத்தகைய கொலைகளிற்கான நன்றிக்கடனாகவே அமைச்சு பதவிகளை ஜனாதிபதி கோத்தபாய வழங்கியதாக அவரது கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
டக்ளஸின் பணிப்பில் தராகி சிவராம்,உதயன்,சுடரொளி ஆசிரியராக இருந்த ந.வித்தியாதரன் உள்ளிட்ட பலரை கொழும்பில் கொலை செய்ய வேவு பார்த்து திரிந்த நாட்களை அவர் நினைவுகூர்ந்தார். சிவராம் சம நேரத்தில் வேவு பார்த்து திரிந்த புளொட் கும்பலிடம் அகப்பட்டுக்கொண்டார்.
தராகி சிவராமிற்கு அதிஸ்டம் இல்லாதி போதும் ந.வித்தியாதரனை மகிந்த ராஜபக்ச தலையிட்டு காப்பாற்றினார்.
அதே ந.வித்தியாதரனின் 60வது பிறந்ந நாளில் டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்த ராஜபக்சவும் வருகை தந்து பல்லாண்டு வாழ வாழ்த்தியதும் வரலாற்றின் பதிவே.