கோதாவின் குப்பையை அள்ளவா கூட்டமைப்பு சந்திப்பை நாடுகிறது! பனங்காட்டான்
‚கோதபாய அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணை அறுபது வீதமானது. ஆனால், தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழர் தாயக பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு எழுபத்தைந்து வீதமானது. எனவே எமது மக்கள் கொடுத்த ஆணையை நாம் ஒருபோதும் மீற மாட்டோம்“ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்திருப்பதை சத்தியவாக்காக அனைத்துத் தமிழ் கட்சிகளும் மனதில் பதித்து செயற்பட வேண்டிய காலமிது.
இழுபறியிலிருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதக் கையளிப்பும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த இலங்கை ஜனாதிபதி கோதபாயவின் கொள்கை விளக்க உரையும், சொல்லி வைத்தது போன்று இந்த மாதம் 18ம் திகதி இடம்பெற்றன
ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டதாக இரு நிகழ்வுகளும் ஒத்துப் போகலாமென்ற நம்பிக்கை கூட்டமைப்புக்கு இருந்தது. சில தமிழ் ஊடகங்கள் ஊகத்துடன் சேர்த்து இதனை ஊதிப் பெருப்பித்தன.
அந்த நம்பிக்கையை ராணுவ மரபின் ஷமுன்னோக்கிச் செல்| (புழ குழசறயசன) என்ற பயிற்சியில் வந்த கோதபாய, அதே ராணுவ வழியில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழர் தரப்பை மட்டுமன்றி ஊடகங்களையும் ஏமாற்றி விட்டார். இந்த நிலையில், கடிதக் கையளிப்பையும் கோதபாயவின் கொள்கை விளக்க உரையையும் தனித்தனியாகவே அணுக வேண்டும்.
ஒரு வாரத் தாமதத்தின் பின்னர் தமிழ்க் கட்சிகளின் கடிதம் 18ம் திகதி இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது. சம்பந்தன் பார்த்த அட்டமியாலும், தூதுவர் இந்தியாவுக்குப் பறந்ததாலும் ஒரு வாரம் பின்போடப்பட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால், இந்தியத் தூதுவர் புதுடில்லி செல்லவில்லையென்றும் கொழும்பிலேயே தங்கியிருந்தார் என்றும் விடயமறிந்த – ராஜரீக வட்டார தொடர்புகளைக் கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தொலைக்காட்சிச் செவ்வி ஒன்றில் இந்த வாரம் தெரிவித்திருந்தார். தூதுவர் ஷஅமைதி|யாக கொழும்பிலேயே இருந்தார் என்பது இவரது கூற்று. அப்படியானால் புதுடில்லியின் அவதானிப்பு கடிதக் கையளிப்பை வேண்டுமென்றே தாமதித்தது என்றால், அது ஏன் என்பதை கூட்டமைப்பே கண்டுபிடிக்க வேண்டும்.
18ம் திகதிய கோதபாயவின் கொள்கைவிளக்க உரையின் பின்னரே கடிதக் கையளிப்பு இடம்பெற வேண்டுமென புதுடில்லி விரும்பியதாக நம்பிக்கையான இந்தியத் தகவலொன்று தெரிவிக்கிறது. இக்கடிதத்தில் ஒப்பமிட்ட தமிழரசு, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்கள் ஒன்றாக நின்று கடிதத்தைக் கையளித்தது, 1987ம் ஆண்டு யூலையில் இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஜே.ஆரும் ராஜிவும் கையெழுத்திட்ட வரலாற்று ஒளிப்படத்துக்கு ஒப்பானதாக இனி பயன்பட வேண்டியது.
இவ்வாறு கூறுவதற்கு நியாயமான காரணம் உண்டு. ஈழத்தமிழரின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண அனுசரணையாளராக செயற்பட்ட இந்தியா திடுதிப்பென தாமாக இலங்கையுடன் ஒப்பந்தமிட்டு அதனை தமிழர் தரப்பிடம் திணித்தது. இதனால் ஏற்பட்ட இரண்டரை வருட இந்திய ராணுவ திமிராட்டம் சொல்லொணாத் துயரத்தை தமிழருக்குக் கொடுத்தது.
ஜே.ஆரின் பின்னர் ஜனாதிபதியான பிரேமதாச இந்திய ராணுவத்தை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டு, அதனை நடைமுறையிலும் வெற்றிகரமாக்கினார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பதின்மூன்றாவது அரசியல் திருத்தம், மாகாண சபைகள் நிர்வாகம் என்பவை அமைந்த போதிலும், அழையா விருந்தாளியாக இலங்கைக்குள் சென்று அவமானத்துடன் வெளியேற்றப்பட்ட தாக்கம், இந்தியாவில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அதற்குத் தொடர்ந்து இருந்து வந்தது.
34 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக கடிதம் தயாரித்து கையொப்பமிட்டு இந்தியாவை வரவழைத்துள்ளன தமிழ்க் கட்சிகள். இது கும்பம் வைத்து மாலையிட்டு மாப்பிள்ளையை வரவேற்பது போன்றது. மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை முறையான வகையில் பயன்படுத்தி காரியத்தைச் சாதித்துள்ளது இந்தியா.
தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு இந்தியப் பிரதமர் எவ்வளவு முக்கியத்துவம் கொடு;ப்பார் என்பதை நிச்சயப்படுத்தி சொல்ல முடியாது. இதனைப் புரிந்து கொண்டுதான் போலும், பிரதமர் மோடியை சந்திப்பதற்கு தாங்கள் காத்திருப்பதாக இந்தியத் தூதுவரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் சம்பந்தன். (மறுதரப்பில் கோதபாய ராஜபக்சவையும் சந்திக்க விரும்புவதாக பல தடவை கூறியுள்ளார். அதுபோன்று சம்பந்தன் தரப்பினரை சந்திக்கப் போவதாக கோதபாயவும் அமெரிக்காவில் நின்றும் பிரித்தானியாவில் நின்றும் கூறியுள்ளார்).
தமிழ்க் கட்சிகள் கொடுத்த கடிதம் சிலவேளை மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கும், அதன் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கைக்கும் வலுவான ஒரு ஆவணமாகப் பயன்படுத்தப்படலாம்.
அதற்கும் அப்பால், கோதபாய ஆட்சி பீடத்தில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதென நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் கூறலாம்.
இந்தக் கடித விபரம் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னரே இலங்கை இந்திய ஊடகங்களில் வெளிவந்துவிட்டது. இதன் பிரதியொன்றை கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பார்வைக்கு முற்கூட்டியே வழங்கியதாகவும், அதனை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று பெற்று முழுமையாக வெளியிட்டதாகவும் ரெலோ தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் பார்க்கையில் கோதபாயவுக்கும் இக்கடித விபரம் முழுமையாகத் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் தமது கொள்கை விளக்க உரையில் தமிழரின் அரசியல் அபிலாசைகள் பற்றியும், அதிகாரப் பகிர்வு பற்றியும் அவர் எதுவுமே கூறவில்லையென்றால், தமிழ்க கட்சிகளின் இந்தியாவுக்கான கடிதத்தை அவர் ஒரு குப்பையாகவே கருதினார் என்பதும், அவர் ஜெனிவாவையிட்டு கிஞ்சித்தும் அஞ்சவில்லையென்பதும் புலனாகிறது.
இந்தப் பின்னணியில் நின்றே தமிழர் பிரச்சனைகளை அவர் எவ்வாறு நோக்குகிறார் என்பதையும் அவரது ராணுவ மனோநிலை எவ்வாறு இயங்குகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இவர் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழருக்கு அரசியல் பிரச்சனை இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அவரது எடுபிடிகளும் அதே கொள்கையாளர்களே.
தமிழ் மக்களுக்கு இருப்பது பொருளாதார பிரச்சனை, வேலையில்லாப் பிரச்சனை என்றவாறே தொடர்ந்து கூறி வருகிறார். முக்கியமாக தேசிய இனப்பிரச்சனை என ஒன்று இல்லையென்பதாகவே எப்போதும் காட்டி வருகிறார். இதற்கு இயைவாகவே தமது உரையில், – அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்கு வடக்கு கிழக்குப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – என வேண்டினார்.
அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச, பிரித்தானிய தமிழர் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடாக கூட்டமைப்பின் சுமந்திரனுடன் தொடர்பை ஏற்படுத்தி நடத்திய சம்பாசணை பகிரங்கமாக இப்போது பல மட்டங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கூட்டமைப்பின் அரசியல் போக்குக்கு சார்பாக கோதபாய தமது உரையில் சில கருத்துகளை தெரிவிக்கலாமென்ற எதிர்பார்ப்பு இதன் பின்னர் சம்பந்தன் தரப்பில் ஏற்பட்டது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியவர் பசில் ராஜபக்ச. ஆனால், கோதபாயவின் உரையில் அது எதுவுமே இடம்பெறவில்லை என்பது சம்பந்தனின் ஷவீடு|க்குள் இருந்து வெளிவந்துள்ள தகவல்.
இதனாற்தான் கொள்கைவிளக்க உரை தந்த ஏமாற்றத்தை பசில் ராஜபக்ச மீது சுமந்திரன் அருகிருக்க சம்பந்தன் விசிறித் தள்ளினார் என்று அதே வட்டாரங்கள் கூறுகின்றன. கொள்கை விளக்க உரையின் பின்னர் சம்பிரதாய தேநீர் விருந்து உபசாரத்தை சம்பந்தன் கம்பனியினர் புறக்கணித்தது மிக முக்கியமான செய்தியாக்கப்பட்டுள்ளது.
கொள்கை விளக்க உரை வெறும் குப்பை என்றும், அதில் ஒன்றுமில்லையென்பதை ஜனாதிபதியிடம் சொல்லுமாறு பசில் ராஜபக்சவிடம் சம்பந்தன் நேருக்கு நேர் சொன்னதாகவும் செய்திகள் சொல்லுகின்றன.
கொள்கை விளக்க உரையில் ஏதோ சில இடம்பெறுமென்று கொடுக்கப்பட்ட அதீத நம்பிக்கையை விழுங்கியதால் ஏற்பட்ட ஏமாற்றமே சம்பந்தனை சீற்றமடையச் செய்திருக்கிறது. அவர் மட்டுமன்றி செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் ஆகியேர்ரும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை பகிரங்கப்படுத்தியிருப்பதானது அறுந்த கயிறை பிடித்தது உண்மை என்பதை நிரூபிக்கிறது.
கோதபாயவின் உரை முடிவுற்றதும் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக தமது எதிர்ப்பைத் தெரிவிக்க சம்பந்தன் விரும்பினார் என்றும், ஆனால், நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறக்கூடாதென்பதற்காக அதனைத் தவிர்த்தார் என்றும் இன்னொரு செய்தி சொல்கிறது.
சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்தைப் புறக்கணிக்கலாம் என்றால், லொபியில் வழிமறித்து பசிலிடம் சீறிப் பாயலாமென்றால், அதனை நாடாளுமன்றத்தில் சம்பந்தன் தெரிவித்திருந்தால் அதிகாரபூர்வ பதிவான ஹான்சாட்டில் அது இடம்பெற்றிருக்கும்.
அதனைத் தவிர்த்து ஊடகங்களுக்கான சீற்றமும், அதிர்வு தரும் அட்டகாசமும் மேற்கொள்வதில் பயனில்லை. இது வழமையான அரசியலே. தமிழ் அரசியல்வாதிகளைப் பொதுத்தவரையில் இப்போது அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள் ஊடக அறிக்கைகள், சமூக ஊடகப் பதிவுகள், ஊடக மைய சந்திப்புகள் என்று போகின்றதே தவிர காத்திரமானதாக எதுவுமில்லை. அதனையே கொள்கைவிளக்க உரைக்கான பிரதிபலிப்பிலும் காணமுடிகிறது.
அதேசமயம், கொள்கைவிளக்க உரையில் தமிழ்த் தேசிய கட்சிகள் தனித்தனியாக கருத்துத் தெரிவித்திருப்பினும் எல்லோரும் ஒரே தளத்தில் – கட்சி அரசியல், தேர்தல் அரசியல், இணக்க அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் இணைந்து நிற்பது கொள்கையை பலப்படுத்துகிறது.
தமிழர் தாயக பிரதிநிதிகள் அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோதபாய விடுத்த கோரிக்கைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்துள்ள பதில் வலிமையானது.
‚கோதபாய அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணை அறுபது வீதமானது. ஆனால், தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழர் தாயக பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு எழுபத்தைந்து வீதமானது. எனவே எமது மக்கள் கொடுத்த ஆணையை நாம் ஒருபோதும் மீற மாட்டோம்“ என்பதை சத்தியவாக்காக அனைத்துத் தமிழ் கட்சிகளும் மனதில் பதித்து செயற்பட வேண்டிய காலமிது.
எதுவுமே இல்லாத கொள்கைவிளக்க உரையை நிகழ்த்திய கோதபாயவுடன் தமிழர் அரசியல் அபிலாசைகளுக்காக சந்திப்பு நடத்த வேண்டுமென கூட்டமைப்பு தொடர்ந்து ஒற்றைக்காலில் நிற்குமானால், அவர் கொட்டிய – இனியும் கொட்டப்போகும் குப்பைகளை அள்ளிச் சுமக்க எடுக்கும் முயற்சியாகவே இது அமையும்.