November 25, 2024

13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேர்லினில் போராட்டம்

ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வாக பதின்மூன்றாம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச் சதியை எதிர்த்து தாயகத்தில் நடைபெறும் மாபெரும்மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்மாறு புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளையும், மக்களையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை உரிமையுடன் கோருகிறது

அந்த வகையில் இன்றைய நாளில் யேர்மன் தலைநகரில் 13ம் திருத்தத்தை அரசியற் தீர்வாக காட்டும் முயற்சிக்கு எதிராக கடும் குளிருக்கும் மத்தியிலும் இன உணர்வுடன் ஒன்றுகூடிய மக்கள் தமது கண்டணத்தை தெரிவித்தார்கள். தாயகத்தில் இருந்து மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்களின் தலைவரும் திரு கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இணையவழி ஊடாக கலந்துகொண்டு 13 ஆம் திருத்தமும் அதன் பின்னுள்ள கூட்டுச்சதியையும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் முகமாக தமிழ் மக்களிடம் ஆணை பெற்று, தேர்தல்காலத்தில் சமஸ்டி அடிப்படையில் தீர்வினைப் பெற்றுத்தருவதாக மக்களுக்கு உறுதியளித்த தமிழத்தலைவர்கள் தற்போது தமது சுயலாபத்திற்காக தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தியதோடு தமது கோபத்தை உணர்வுடன் காட்டினார்கள்.

எதிர்வரும் 30 ம் திகதி தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பில் 13 ஐ கோரும் கூட்டுச் சதியை எதிர்க்கும் முகமாக நடைபெறும் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையுடன், விடுதலை நோக்கிய பயணத்தில் எத்தனை துரோகங்கள் வந்தாலும் அதை முறியடித்து தொடர்வோம் எனும் உறுதியுடன் நிகழ்வு முடிவுற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert