நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்றால்! இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முன்வாருங்கள்!
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலேயே ஜனாதிபதியிடம் இருக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவித்ததானது,
ஜனாதிபதி தனது உரையில் வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி வாக்களிக்காத மக்களுக்கும் பொறுப்புக் கூறும் கடமை தமக்கு உண்டு என்று குறிப்பிட்டிருந்தார்.
அக்கருத்து அவருக்கு வாக்களித்த சிங்கள மக்கள் பற்றியதா? அல்லது வாக்களிக்காத சிங்கள மக்களை பற்றியதா? அல்லது அவருக்கு வாக்களிக்காத தமிழ்த் தேசிய மக்களையும் சேர்த்துதான் கூறினாரா? என்ற கேள்விகள் உள்ளன.
ஆனால் நடவடிக்கைகளை நோக்கும் போது தமிழ் மக்களை அவர் முற்றாக புறக்கணித்துள்ளார் என்பதனை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
அவரின் உரையில் நீண்ட காலமாக இருக்கும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வுகளையும் அவர் முன்வைத்திருக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். தமிழ் மக்கள் கடந்த காலங்களில் அரசியலமைப்பை நிராகரித்து அவர்களின் உரிமைகளுக்காக போராடி வந்துள்ளனர்.
தமிழ்த் தேசியம், இறைமை, சுயநிர்ணய உரிமை, சமஷ்டித் தீர்வு என கோரியே அவர்களின் போராட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இந்த கோரிக்கை கைவிடச் செய்யும் நோக்கில் இலங்கை அரசு 80களில் இருந்து நடத்திய இனவழிப்பு யுத்தத்தின் ஒரு பகுதியை அரங்கேற்றியதில் ராஜபக்ஷ அரசுக்கும் அவருக்கும் பெரும் பங்குண்டு.
இந்நிலையில் ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் குறித்து எதனையும் கூறவில்லை. அவர்களுக்கு வெறும் பொருளாதார பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சனைகளே இருப்பதாக கூறி திசை திருப்பும் வகையில் அவரின் உரை அமைந்துள்ளது.
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்கள், சிங்கள மயமாக்கல்கள் மூலம் நிலம் பரிக்கப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தமாக ஒருபோதும் இருக்க முடியாது. அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை முன்னிலைப்படுத்தி கையெழுத்திடப்பட்டிருந்தாலும் அதனை அரசாங்கம் மதிக்க வேண்டும்.
எனினும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை மாகாண சபைகள் மற்றும் 13ஆவது திருத்தத்திற்குள் முடக்கிவிட முடியாது. அதனை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்த இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரையில் கோட்டாபய ராஜபக்ஷவோ, புத்தப்பெருமான் வந்தாலும்கூட இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதனை கூறிக்கொள்கின்றேன்.
உங்களுக்கு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலேயே இருக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முன்வாருங்கள். தீர்வென்பது தமிழ் மக்கள் விரும்பும் வகையில் அமைய வேண்டும் என்றார்.