November 25, 2024

13ஜ ஏன் இந்தியாவிடம் கோருகிறோம் சுமந்திரன் விளக்கம்!

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையிடம் கோராமல் ஏன் இந்தியாவிடம் கோரியிருக்கின்றோம் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேலும் குறிப்பிடுகையில்:

இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன்வந்து உதவிக்கரம் நீட்டிய போது, அந்த உதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றிருக்கிறது.

அதன் காரணமாகவே 1987 இல் ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அது இன்றும் அமுலில் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

எவ்வறாயினும் ஒற்றையாட்சிக்குள்  13 ஆவது திருத்தம் புகுத்தப்பட்ட காரணத்தினால் அது ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக கருத முடியாமலிருக்கிறது.

அதனை தாண்டி செல்ல வேண்டும் என்பதால் தான் சமஷ்டி கட்டமைப்பிலான ஒரு ஆட்சி முறை அவசியம்,  அது எமது சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் கோரப்படுகிறது என்பதை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் பிரயோசனமற்ற முறைமை என்பதை நாம் தொடர்ந்தும் தெரிவித்திருக்கின்றோம். அதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.

எவ்வாறிருப்பினும் இதன் ஊடாகவே நாட்டின் ஆட்சி முறைமையில் , அரசியலமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது. 

வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் சுயமாக தங்களை தாங்களே ஆளும் ஒரு முறைமையில் சமஷ்டி கட்டமைப்பில் தங்களின் சுய நிர்ணய உரிமைகளின் அடிப்படையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதென்பதே அந்த மக்களின் அபிலாஷையாகக் காணப்பட்டது. இதனையே மக்கள் அவர்களின் ஆணையாகவும் எமக்கு வழங்கினர்.

எனவே வெறுமனே 13 ஆவது திருத்தத்தினை அமுல்படுத்தக் கோருகின்ற ஒரு கடிதத்தில் எம்மால் பங்குபற்ற முடியாது என்ற நிலைப்பாட்டினை நாம் கொண்டிருந்தமையால் 7 பக்கங்களைக் கொண்ட ஒரு மாற்று வரைபை , கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி ஏனைய கட்சிகளிடம் நாம் சமர்ப்பித்தோம். 

அதன் பின்னர் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடல்களின் பின்னர் குறித்த 7 பக்க கடிதம் உள்வாங்கப்பட்டு, ஏனைய கட்சிகள் தயாரித்திருந்த இரு பக்க கடிதத்தில் காணப்பட்ட முதல் மூன்று பந்திகளையும் இதில் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டு ஒரு வரைபு தயாரிக்கப்பட்டது.

அந்த வரைபு தயாரிக்கப்பட்டு அனைவரும் இணங்கியிருந்தாலும் கூட, அதன் பின்னர் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரசும் அதில் கையெழுத்திடுவதில் சிறு சிக்கல் காணப்படுவதாக தெரிவித்தமையால் அவர்களின் தரப்பிலுள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டு திருத்தங்களை மேற்கொள்ள முயற்சித்த போதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. 

எனவே இந்த கட்சிகள் குறித்த ஆவணத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று அறிவித்ததையடுத்து, ஏனைய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிட்டு டிசம்பர் 29 ஆம் திகதி குறிப்பிடப்பட்டு கடிதமொன்று தூதரகங்களுக்கும், ஊடகங்களுக்கும் உத்தியோகபூர்வமற்ற முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மலைய கட்சிகள் , முஸ்லிம் காங்ரஸ் என்பனவும் இதில் கையெழுத்திட வேண்டும் என்று நாம் விரும்பியமையால் ஆரம்ப வரைபிலிருந்து விளக்கி வைத்த சில விடயங்களை மீள சேர்த்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

இது தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு அந்த விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. இது மிகவும் முக்கியமான விடயமாகும். 

இறுதியாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இரண்டாம் பந்தியின் கடைசி இரண்டு வசனங்களையும் படித்தால் முதலில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இதற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டினை அறிந்து கொள்ளலாம்.

அதாவது சுய நிர்ணய உரித்தின் அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான் , மக்கள் எமக்கு தொடர்ச்சியாக கொடுத்து வந்த மக்கள் ஆணையாகக் காணப்படுகிறது என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல. 

வடக்கு கிழக்கில் சரித்திர பூர்வமாக வாழ்ந்த வாழ்விடங்களில் இந்த மாற்றம் அமைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான எமது முன்மொழிவுகளில் நாம் இதனையே தொடர்ச்சியாக முன்வைத்திருக்கின்றோம்.

கடந்த 11 ஆம் திகதி கடிதத்தில் இந்த விடயங்கள் உள்வாங்கப்பட்டு 7 பக்கங்களைக் கொண்ட கடிதத்தை இந்திய பிரதமரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இதில் எமது அபிலாஷைகள் என்ன என்பதும், இலங்கை அரசாங்கங்கள் எவ்வாறான வாக்குறுதிகளை தொடர்ச்சியாக கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பதும், இந்தியா உட்பட மற்றைய நாடுகளின் தலைவர்களும் தீர்வு எப்படியாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்ற விடயங்கள் சேர்க்கப்பட்டு 13 ஐ முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், அத்தோடு நின்று விடாமல் 1987 இல் இருந்து தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாம் இந்திய பிரதமரிடம் கோரியிருக்கின்றோம்.

இந்த விடயத்தை இலங்கையிடம் கோராமல் ஏன் இந்தியாவிடம் கோரியிருக்கின்றோம் என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். 

இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன்வந்து உதவிக்கரம் நீட்டிய போது , அந்த உதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றிருக்கிறது. 

இந்திய பிரதமர் இந்திரா காந்தி 1983 இல் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைக்கு பின்னர் தனது சிறப்பு தூதுவரை அனுப்பி உதவுவதாகக் கூறிய போது, இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டது.

அதன் காரணமாகவே 1987 இல் ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அது இன்றும் அமுலில் காணப்படுகின்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். அதன் அடிப்படையிலேயே ஆட்சி சீர் திருத்தங்கள் செய்ய ஆரம்பிக்கப்பட்டன. 

மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதிலிருந்து அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. அது முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. ஒற்றையாட்சிக்குள் அது புகுத்தப்பட்ட காரணத்தினால் அது ஒரு அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக கருத முடியாமலிருக்கிறது. 

அதனை தாண்டி செல்ல வேண்டும் என்பதால் தான் சமஷ்டி கட்டமைப்பிலான ஒரு ஆட்சி முறை அவசியம்.  அது எமது சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் கோரப்படுகிறது என்பது இந்த கடிதத்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert