இனப்பிரச்சினை தீர்வு:கோத்தாவின் கடலுக்கடியிலாம்!
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசின் கொள்கையை விளக்கி இன்று பாராளுமன்றில் ஆற்றிய உரையில், „இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக“ பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளார்.
இதனிடையேஉரை நிறைவு பெற்ற பின், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடன் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்“ என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி இன்று தன் கொள்கை உரையில் தெரிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட ஊகங்கள் பொய்த்துள்ளன.
கொழும்பின் ராஜதந்திர சமூகம் தவறாமல் வாசிக்கும் பிரபல வார இறுதி ஆங்கில பத்திரிக்கையின் அரசியல் ஆரூடம் பொய்த்தது.அப்பத்திரிக்கை தனது ஏற்புடைமையை இழந்தது என்றும், அதை நம்பிய தமிழ் அரசியல்வாதிகளும் ஏமாந்தனர் என்றும், சற்று முன் என்னுடன் உரையாடிய மேற்கு நாடு ஒன்றின் ராஜதந்திரி சிரித்தப்படி சொன்னார் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
„தேசிய இனப்பிரச்சினை“ இருப்பதாக ஏற்க ஜனாதிபதி தன் உரையில் தெளிவாக மறுக்கிறார்.
நிலவும் பிரச்சினைகளை „பொருளாதார“ பிரச்சினையாக மட்டுமே இருக்கமாக பார்க்கிறார்.
தனது அரசின் செயற்திட்டங்களுக்கு வடகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் „ஒத்துழைப்பு“ வழங்க வேண்டும் என்பதுவே அவரது அதிகபட்ச கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிடல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார்.
„உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” என ஜனாதிபதியின் உரையின் பின் என்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேலியாக தெரிவித்தாராம்.