November 26, 2024

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்..

தமிழீழ விடுதலை புலிகள் தமிழை காதலித்தனால் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்கள் வெகு விமர்சையாக நடந்ததாக கம்பவாரிதி இ.ஜெயராஜ் கூறியுள்ளார்.
 
யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நல்லுார் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது கம்பவாரிதி மேலும் தெரிவிக்கையில்:-யாழ்ப்பாணம் தமிழுக்கு பெயர்போன ஒரு பிரதேசம் மட்டுமல்லாது பல்துறை அறிஞர்களையும் பல்துறை மகான்களை உருவாக்கிய பெருமை யாழ்ப்பாண மண்ணுக்கு உரியது.

இவ்வாறு பல பெருமைகளை தன்னகத்தேகொண்ட யாழ் மண் இன்றைய காலப்பகுதியில் பல தடுமாறல்களை எதிர்நோக்கி செல்வதாக அறிகிறேன்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய தமிழ் விழாக்கள் மூன்றில் நான் பங்கெடுத்து அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் யாழ்.மாநகரசபை தமிழுக்கு பெருமை சேர்க்கும்.முத்தமிழ் விழாவை ஏற்பாடு செய்தமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது கம்பன் விழாக்களை வெகுவிமர்சையாக நடத்தினோம் . அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் தமிழுக்காக வேறு எந்த விழாக்களும் பெரிய அளவில் நடத்தப்படவில்லை.

விடுதலைபுலிகளின் காலத்தில் கம்பன் விழா மக்கள் வெள்ளத்தால் நிறைந்த நிலையில் அவர்களும் தங்களுடைய ஆடையில் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

எனது நீண்டநாள் ஆதங்கம் மாநகரசபையின் முத்தமிழ் விழாவை காணும்போது அந்த ஆதங்கம் தீர்ந்து இருக்கிற நிலையில் இடைவிடாது தொடர்ந்து முத்தமிழ் விழா மக்கள் கூட்டத்தால் நிறைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தற்போது இடம்பெறும் தமிழ் விழாக்களுக்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு கொடுத்தால் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். நான் இளவயதில் இருந்தபோது யாழ்ப்பாணத்தில் நடத்திய கம்பன் விழாவில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தை விழாவுக்கு அழைக்கவில்லை.

அக்காலப்பகுதியில் கம்பன் விழா ஐந்து நாட்கள் நடைபெற்ற நிலையில் இறுதி மூன்று நாட்களும் அமிர்தலிங்கம் அழைக்காமலே தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார்.

ஆனால் அவர் வந்த முதல் இரு நாட்களும் அவரை நாங்கள் மேடையில் அமர்த்தவில்லை ஆதாரவாளர்கள் எம்முடன் முரண்பட்டார்கள். இறுதிநாள் அவரை மேடையில் ஏற்றினோம்.

இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் அரசியல்வாதிகளை நாங்கள் விழாவுக்கு அழைப்பதில்லை நாம் அழைக்காவிட்டாலும் எமது விழாவில் இடம்பெற்ற தமிழ் கலை உணர்வு அவரை விழா இடத்திற்கு அழைத்து வந்தது.

ஆகவே இவ்வாறான விழாக்களை நடத்தும்போது அழைத்தவர்கள் தான் வரவேண்டும் என நினைக்காது அனைத்து தரப்பினர்களும் தமிழை வளர்ப்பதற்கு அணி திரண்டு வர வேண்டும் எனவும் கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert