கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய ராட்சத எரிமலை
டோங்கோவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு டோங்கோ. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளைக் கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1.03 லட்சம் தான்.
இந்நிலையில் இந்தத் தீவுகள் தேசத்தில் கடலுக்கு அடியில் ஹுங்கா ஹா அபாய் என்ற எரிமலை இன்று வெடித்துச் சிதறியது. இந்த எரிமலை வெடித்துச் சிதறும் சத்தம் தெற்கு பசிபிக் பிராந்தியம் முழுவதும் கேட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மக்கள் இந்த சத்தத்தைக் கேட்டுள்ளனர். டோங்கோவில் இருந்து 800 கி.மீ தொலைவில் இருந்த ஃபிஜியிலும் எரிமலை வெடிக்கும் சத்தம் கேட்டது.
கடலுக்குள் எரிமலை வெடித்துச் சிதறியவுடனேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்குள், எல்லா இடங்களிலும் புகையும், சாம்பலும் சூழ்ந்தது. கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மெர் டாஃப் கூறுகையில், “நான் ஏதோ வெடிகுண்டு வெடித்தது என்றே நினைத்தேன். ஆனால் அப்புறம் தான் நிலைமையை உணர்ந்தோம். என் தங்கையை தூக்கிக் கொண்டு ஒரு டேபிளுக்கு அடியில் தஞ்சம் புகுந்தேன் ” என்றார்.
டோங்கோவில் சுனாமி தாக்கியதையடுத்து ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகள், குறிப்பாக டாஸ்மானியா உள்ளிட்டப் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடித்துச் சிதறிய சத்தம் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிஜி தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலும் கேட்டுள்ளது.