ஸ்கொட்லாந்தில் கோட்டாபய தங்கியிருக்கும் விடுதிக்கும் முன் போராட்டம்!!
ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழினப் படுகொலையாளியான சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் முன்னெடுத்துள்ளனர்.
க்லாஸ்கோவிலில் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் Doubletree Hilton விடுதியை அறிந்த தமிழர்கள் பேருந்து ஒன்றில் சென்று விடுதியின் இரு நுழைவாசல்களையும் மறித்து கோட்டாபாயவை வெளியே செல்லவிடாது அவருக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறிலங்கா அதிபர் கோத்தபாய ஒரு போர்க் குற்றவாளி, கோத்தபாய ராஜபக்ச இனப்படுகொலையாளி, சிறீலங்கா ஒரு பயங்கரவாத நாடு, தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு கோத்தாபாயவின் போர்க்குற்றங்களை தாக்கும் பதாதைகையும் தாங்கியவாறு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
காலை 8.30 மணியளவில் காவல்துறையினர் நுழைவாசல் தடைகளை விலக்கி அங்கிருந்து காவல்துறையின் பாதுகாப்புடன் கறுப்பு நிற மகிழுந்து ஒன்று வெளியேறியுள்ளது.
குறித்த போராட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி ஸ்கொட்லாந்து − க்லாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொள்ளும் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நடைபெறவுள்ள பிரிதொரு போராட்டம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.