திரிவு படுத்தியதை சரிசெய்யுங்கள் !கட்டமைப்பை களங்கப்படுத்தாது தலைர்சொன்னதை செய்யுங்கள் !
யேர்மனி உட்பட 14 நாடுகளில் கடந்த 05.06.2021 அன்று ICEDT எனும் புதிய அறிமுகம்செய்யப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெறுமாறு பொறுப்பானவர்களிடத்தில் பலமுறை கோரியும், பதிலேதும் கிடைக்காமலும் நடைமுறைச்சாத்தியமற்ற பொறுப்பற்ற பதில்களாலும் பல தமிழ்ப்பாடசாலைகள் தனித்து இயங்க முடிவுசெய்துவிட்டன. குறிப்பாக யேர்மனியில் இது பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களைப்பற்றி மக்களுக்கு விழிப்பூட்டிய எம்மில் தொடர்ச்சியாக முரண்நகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
„கட்டமைப்புகளை உடைக்கிறோம்“ என்றோர் சொல்லாடலைக்கொண்டு எம்மீது பழிசுமத்திவரும் யேர்மன் கல்விக்கழகப் பொறுப்பாளர் லோகனும், அவரது பொறுப்பாளர் சிறிரவி அவர்களும் தான் எம்மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருகிறார்கள். இவர்களிடமும், இவர்கள் சொல்வதை வேதவாக்காகக்கொண்டு அறியாமையில் சிக்கி நிற்போரிடமும் சில கேள்விகள்…
1.தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்க்கல்விப்பேரவையின் (பிரான்சு) நேர்த்தியான பாடநூல்களைச் சிதைத்து, புதிதாக மேம்படுத்தப்பட்ட பாடநூல் என்ற பெயரில் திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை அறிமுகம் செய்தது நாமா நீங்களா ?
2.பாடநூலில் உள்ள வரலாற்றுத்திரிபுகளைச் சுட்டிக்காட்டிய பின்னரும், அதுபற்றி வினாவிய தமிழ்ப்பாடசாலை நிர்வாகிகளுக்கும் பெற்றோருக்கும் தெளிவான பதிலைக்கூறாமல் இழுத்தடித்து, விடயத்தை நீர்த்துப்போகச் செய்தது நாமா நீங்களா ?
3. „தவறுகள் உண்டு, ஆனால் மெல்ல மெல்ல அவற்றைத் திருத்துவோம்“ என காலவரையறையற்ற பதிலைக்கூறி மக்களை முட்டாளாக்க முயன்றது நாமா நீங்களா ?
4. திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை ஆய்ந்தறிந்து வெளியேறிய பாடசாலைகளை நடுத்தெருவில் விடாமல், அப்பாடசாலைகளை மீளவும் தமிழ்க்கல்விப்பேரவையின் கீழ் ஒருங்கிணைத்து மாணவர்களின் தமிழ்க்கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆவன செய்யும் நாம் துரோகிகள் என்றால், தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கல்விப்பேரவையைச் (பிரான்சு) சிதைத்த நீங்கள் யார் ?
5. திரிபுகள் உண்டு என்று தெரிந்தபின்பும், பாடநூல்களை மீளப்பெறாமல் அதே பாடநூல்களோடு பாடசாலைகளை ஆரம்பித்த குற்றவாளிகள் நீங்களா நாங்களா ?
6. தமிழ்ப்பாடநூலில் உள்ள திரிபுகளுக்குப் பதில்சொல்ல வக்கின்றி, இதைக்கேட்க தேவன் யார் என்று குத்துக்கரணம்அடித்து மக்களைஏமாற்றுவது நாமா நீங்களா .,?
7. ஏலவே சிறப்பாக இயங்கி வந்த தமிழ்க்கல்விப்பேரவையின் (பிரான்சு) சிறப்பான பாடநூல்களைச் சிதைத்தற்கான காரணம் கேட்குமிடத்து, „அந்நிறுவனப்பொறுப்பிலிருந்தவர் பணமோசடி செய்துவிட்டதாக“ பொறுப்பற்ற பதிலைக் கூறியது நாமா நீங்களா ? பொறுப்பிலிருந்தவர் பணமோசடி செய்தால் பொறுப்பிலிருப்பவரை மாற்றுவதே ஏற்புடையது என்பதுகூட அறியாமல் பாடநூலை மாற்றுவதற்குச் சம்மதித்தது நாமா நீங்களா ?
8.திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெறாமல், தவறை ஏற்றுக்கொண்டபின்பும் மாற்றுவழிதேடாமல் அமைதியாயிருப்பது நாமா நீங்களா ?
திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை அறிமுகம் செய்தவர்கள் நீங்களே, இப்பாடநூல்களைப்பார்த்துச் சினமுற்று பாடசாலைகள் இரண்டாவதற்குக் காரணமும் நீங்களே. உங்களது தவறுகளால், ஏலவே இருந்த கட்டமைப்பைவிட்டு வெளியேறும் தமிழ்ப்பாடசாலைகள் திசைமாறிச்சென்றுவிடாமல் ஒழுங்குபடுத்தும் வேலையைத்தான் நாம் செய்துவருகிறோம். மொத்தத்தில் நீங்கள் செய்த தவறுகளுக்காக நாம் ஊர் ஊராய் அலையவேண்டியிருக்கிறது.
எடுத்ததற்கெல்லாம் „துரோகிப்பாட்டு“ பாடுவதைத் தவிர்த்துவிட்டு, இப்பொழுதிருந்தாவது திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெற்று, உண்மையான வரலாறு கொண்ட பாடநூல்களை உருவாக்க முயற்சியுங்கள். முடியாதென்றால்; தமிழ்க்கல்விப்பேரவை (பிரான்சு) அமைப்பை ஏலவே இயங்கியதுபோலவே இயங்குவதற்கு வழிவிடுங்கள்.
குருவிக்கூட்டைச் சிதைத்தவன் தியாகி,
குஞ்சுகளுக்கு வாழ்வளிப்பவன் துரோகியா ?
நியாயமாரே, மல்லாக்காப் படுத்திருந்து யோசனை செய்யுங்கோ நியாயமாரே….!
-தேவன்