November 22, 2024

வரலாறு என்பது நிலைபெற வேண்டும், லோ. வலன்ரையின்

வரலாறு என்பது நிலைபெற வேண்டும், காலம்காலமாக அவை பேசப்பட வேண்டும். எமது வரலாறும், எமது போராட்டங்களும், எமது அடையாளங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் இது எமது தேசியத்தலைவர் அவர்களது ஆழமான கருத்தாகும்.
இங்குள்ள தமிழின உணர்வாளர்களால் குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் யேர்மனிக் கிளைக்குப் பொறுப்பாக இருந்த மாவீரர் மேஜர் சுரேந்திரக்குமார், அப்போது சர்வதேசப் பொறுப்பாக இருந்த லோரன்ஸ் திலகர், பல பொறுப்புவாய்ந்தவர்கள் ஒன்றுகூடி உருவாக்கப்பட்டதே உலகத்தமிழர் இயக்கம் இதன் ஒரு அங்கமாக உருவானதே தமிழ்க் கல்விப்பணி.

தமிழ்க் கல்விப்ணியின் முதற் குழந்தையாக 1990ம் வருடம் யூச்சன் நகரத்தில் முதலாவது தமிழாலயம் உருவாக்கப்பட்டது.
உலகத்தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளர்களாகப் பல காலகட்டங்களில் பலர் செயற்பட்டிருந்தாலும், கல்விப்பணிக்கு மாமனிதர் ஆசிரியர் இரா நாகலிங்கம் அவர்களே பொறுப்பாகச் செயற்பட்டு வந்தார்கள். இவரால் தமிழாலயம் உருவாக்கப்பட்டது என்ற விடயம் சிலரால் பதிவுசெய்யப்படுகின்றது
அது தவறாகும். தமிழாலயம் என்கின்ற பெயரைத் தேர்வுசெய்து வழங்கியவர் கவிஞர் முகில்வாணன் அவர்களே.

யூச்சன் தமிழாலயத்தை தொடர்ந்து
பல தமிழாலயங்கள் யேர்மனியில் தோற்றம்பெற்றன. அத்தோடு ஏற்கனவே இருந்த சிறிய பாடசாலைகள் தமிழாலயங்களாக மாறின. 1990 ம் ஆண்டு தமிழ்க்கல்விப்பணி என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டு, தமிழ்க்கல்விக் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை 31 ஆண்டுகள் இயங்கிவரும் இம்மரம் வளர்ந்து பெருவிருட்சமாக இன்று நிமிர்ந்து நிற்பதற்குப் பலதரப்பட்டவர்களின் அயராத அர்ப்பணிப்பும் உழைப்புமே காரணமாகும். இதற்கு எனது பங்கும் நிறையவே உண்டு.

1990 ம் ஆண்டு தொட்டு இன்று வரை இயங்கி வருகின்ற இங்குள்ள கல்விப்பணியானது 1999 வரை தமக்குரிய பாடநூல்களைத் தாமே தயாரித்து மாணவர்களுக்குப் போதித்து வந்தது.

1999-2004 வரை (ITEC) நிறுவனம் தயாரித்த பாடநூல்களைப் போதித்து வந்தது.

2004 ம் ஆண்டு
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை (பிரான்ஸ்) என்கின்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டு புலம்பெயர்ந்த எமது மாணவர்களுக்கான பாடநூல்களை தமிழீழ கல்விக்கழகத்தோடு இணைந்து
தயாரித்து, எமது ஒப்பற்ற தேசியத் தலைவரின் அனுமதியோடும், அறிவுறுத்தலோடும் சிறப்பாக இயங்கி வந்ததை அனைவரும் அறிவீர்கள்.

2004- 2020 ம் ஆண்டுவரை 16 வருடங்கள் புலம்பெயர் நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சிறப்பாக இயங்கி வந்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையை, (பிரான்ஸ்) ஓரம்கட்டி, தமது சுயநலன்களுக்காக, அல்லது தமது தேவைகளை, தமது திட்டமிட்ட செயற்பாடுகளை, வேறொரு நிகழ்ச்சி நிரலின்படி அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக புதிதாக ICEDT என்கின்ற புதிய கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கி 05.06.2021 அன்று மேம்படுத்தப்பட்ட பாடநூல்களென புலம்பெயர் மாணவர்களுக்கான பாடநூல்களை பெருமெடுப்பில் வெளியிட்டு வைத்தது ஏன்? எதற்காக? உண்மையான தெளிவான பதிலை யாராவது கூறமுடியுமா?

ICEDT வெளியிடப்பட்ட பாடநூல்களைப் பார்வையிட்ட சில தமிழாலய நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பேசாமடந்தைகளாக சுயநலத்தோடு பொதுவெளியில் பேசத்திராணியற்று நிற்கின்ற சில செயல்வீரர்களும் பாடநூல்களின் சில பக்கங்களை எமது பார்வைக்காக அனுப்பி இருந்தார்கள். இதன் அடிப்படையில் ஆசிரியர் சாந்தன், தேவன், நான் உட்பட மூவரும் இப்பக்கங்களை ஆழமாக முதலில் பார்வையிட்டோம். இதைத்தொடர்ந்து பல பாடநூல்களைப் பெற்று ஆராய்ந்து பார்த்தபோது இப்புதிய பாடநூல்கள் தவறுதலாக, அறியாமல் உருவாக்கப்பட்டதாக நூறுவீதம் தெரியவில்லை. மாறாக ஏதோ தேவைகருதியும், இலங்கை அரசின் கொள்கைகளை ஏற்று, அவர்களது விருப்பு, அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலும், தமிழராகிய எமது வரலாறு, அடையாளங்களை காலம் காலமாக திட்டமிட்டு மறைத்து, ஏலவே பாடநூல்களில் இருந்த விடயங்களை தாயகத்தில் கற்கின்ற எமது மாணவர்களின் பாடநூல்களில் இருந்து நீக்கம் செய்ததற்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்ட இப்பாடநூல்கள் தயாரிக்கப்பட்டதை நாம் கண்டுகொண்டோம். இலங்கை அரசாங்கம் செய்து வருகின்ற எம்சார்ந்த இருட்டடிப்புகளுக்கு மகுடம் சூட்டியது போன்று இப்பாடநூல்களைத் தயாரிப்பதற்கு திட்டம் வகுத்தவர்களும்,
நூலை எழுத்துருவாக்கம் செய்தவர்களும் தமது திட்டங்களை கனகச்சிதமாக நிறைவேற்றி உள்ளார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

இவ்விடயத்தில் வெளியில் இன, மொழிக் காவலர்களாக தம்மை வெளிக்காட்டுபவர்களும், மேடையில் தாம்தான் அனைத்துக்கும் தூணாக நின்றதாகத் தம்பட்டம் அடிப்பவர்களும், தமிழ், விடுதலை என்று முழங்குகின்ற பொறுப்பில் உள்ளவர்களின் உண்மை முகங்களும், உள்நோக்கங்களும், இவர்களது மறுபக்கங்களும் நன்றாகவே புலப்பட்டன.

திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்ட பாடநூல்கள் தொடர்பாக நாமே முதலில் எமது கருத்துக்களைப் பொது வெளியில் பதிவு செய்தோம். இரண்டாவதாக இப்பாடநூல்களை மீளப்பெறுமாறு கையெழுத்துப் போராட்டத்தை நடாத்தினோம். மூன்றாவதாக பொதுவெளியில் பேசுவதற்கு அனைத்துத் தரப்புக்கும் அழைப்புவிடுத்தோம் பாடநூல்கள் சரியென்று இன்றுவரை வாதாடுகின்ற மேதாவிகள், ஒத்தூதுபவர்கள் எவரும் நாம் அழைத்தும்கூட வரவில்லை.
ஓடி ஒழிந்து கொண்டார்கள். பேசுவதற்கு முயற்சித்தவர்கள், நாம் சொல்கின்ற நியாயங்களைக் கேட்க நினைத்தவர்கள்கூட தமிழ்க் கல்விக்கழகப் பொறுப்பாளர் லோகானந்தம் (லோகன்) அவரது கட்டளைக்குத் தலைவணங்கி மாநிலப்பொறுப்பாளர்களூடாக நிர்வாகி, ஆசிரியர்கள் இரவுபகலாகத் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். பூதாகரமாக இன்று உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ள திரிபுபடுத்தப்பட்ட இப்பாடநூல்கள் தொடர்பாக ஒயாது பேசப்படுகின்றது. இப்பாடநூல்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட வேண்டும் என்கின்ற குரல்களும், எதிர்ப்பலைகளும் உலகெங்கும் தோன்றியுள்ளன. செய்தவை யாவும் தவறெனத் தெரிந்தும், தாமாக உள்ளே ஏற்றுக்கொண்ட நிலையிலும், வெளியில் திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்கள் சரியென்று இன்னும் சிலர் கொக்கரிக்கின்றார்கள். அற்ப சலுகைகளுக்காக கூடநிற்கின்ற கூட்டத்தினரும் ஊதுகுழல்களாகச் செயற்படுகிறார்கள். பெற்றோர்கள் பலர் விழிப்படைந்து பொறுப்புணர்வோடு நிற்கிறார்கள். திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்கள் போதிக்கக் கூடாதென்று ஓங்கிக் குரல் கொடுப்பதோடு, திணிக்கப்பட்ட பாடநூல்களையும் நிர்வாகிகளிடம் திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து மயக்கத்தில் இருந்த ஆசிரியர்கள் பலரும் பாடநூல்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து உண்மையை உணர்ந்துகொண்டு இப்பாடங்களைப் போதிக்கமாட்டோம் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்கள்.

பல நாடுகள் இப்பாடநூல்களை முற்றுமுழுதாகப் புறக்கணித்துள்ளன.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை (பிரான்ஸ்) இவர்களிடம் ஒன்றரை இலட்சம் யூரோ பெறுமதியான பாடநூல்கள் களஞ்சியத்தில் உள்ளன. இப்பாடநூல்கள் யாருடைய பணத்தில் அச்சடிக்கப்பட்டன? இப்பாடநூல்களை என்ன செய்வது? பொறுப்பென்று குந்தி உள்ளவர்களே உங்களிடம் பதில் உண்டா?

இப்போது பெரும்செலவில் உங்களால் தயாரிக்கப்பட்ட வரலாறுகள் மறைக்கப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட இப்பாடநூல்கள் அச்சடித்தது யாருடைய பணம்?

கல்விக் கழகப் பொறுப்பாளர் லோகானந்தம் (லோகன்) கல்விப் பொறுப்பாளர் இராஜமனோகரன் இருவரும் தாம் பார்க்காமல் வாங்கிவிட்டோம் என்று கூறுவது ஏற்புடையதா? முதலில் பிழைகள் ஒன்றும் இல்லை என்றார்கள். எழுத்துப்பிழைகள், சின்னத் தவறுகள் உண்டு என்றார்கள். தவறுகள் இல்லை என்று வாதாடியவர்கள், ஓங்கிக்குரல் எழுப்பிய இவர்கள் ஏன் பாடநூல் பக்கங்களை மூடி ஒட்டினார்கள்?
ஏன் ஒட்டுகிறார்கள்?

மேதாவிகளே உங்கள் பணத்தில் உங்கள் வீட்டுக்கு நீங்கள் பொருள் வாங்கவில்லை. அதை எப்படியாவது வாங்குங்கள். மக்கள் பணத்தில் பிழையான புத்தகங்களைக் கொள்முதல் செய்து பிள்ளைகளிடம் திணிக்கப்பட்டு, கட்டாயம் போதிக்க வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமையுண்டு?

உங்களது போலியான முகங்களை ஓரம்கட்டிவிட்டு, வரட்டு கவுரவங்களையும், அநாகரீகப் பேச்சுக்களையும், நிறுத்திவிட்டு, உண்மைகளை வெளிக்கொணர்ந்த எம்போன்றவர்கள்மீது கட்டமைப்பை உடைக்கிறார்கள், பிரிக்கிறார்கள் என்ற அபாண்டமான பழிகளைச் சுமத்துவதையும் நிறுத்திவிட்டு செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெற்றுக் கொள்வதே அனைவர்க்கும் நன்மையளிக்கும்.
வாங்கிய பிழையான பாடநூல்களை எங்கு பெற்றீர்களோ அங்கே திரும்ப ஒப்படையுங்கள். திரும்ப வழங்க முடியவில்லையெனில் செய்த தவறை ஏற்றுக்கொண்டு கொள்முதல் செய்த பாட்நூல்களுக்கான நிதியை லோகன், மனோகரன் ஆகிய நீங்கள் இருவருமே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்கள் சொந்தப்பணத்தைக் கொண்டு ஈடுசெய்யுங்கள்.

1, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை (பிரான்ஸ்) கட்டமைப்பை உடைத்தது யார்?

2, எதற்கும் பொறுப்புக்கூறாது மவுனமாக இருப்பதன் மூலம் தமிழாலயங்கள் தனித்து இயங்க வழிசமைப்பது யார்?

3, சில தமிழாலயங்களில் கல்வி கற்றுவந்த மாணவர்கள் தனியாக இலங்கைப் பாடநூல்களை ஆரம்பந்தொட்டுப் போதித்து வருகின்ற
பிறபாடசாலைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்களே இதைக்கூடத் தடுத்து நிறுத்தாது கையறு நிலையில் நி்ர்வாகிகள் நிற்கிறார்களே இதற்கு காரணம் யார்? இவ்விடயம் தேசியம் பேசுபவர்களின் செவிகளுக்கு எட்டவில்லையா?

சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்ற சிந்தனையோடு காத்திருந்தவர்கள் சிலர் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முயற்சிக்கிறார்கள். பலதரப்புகளுக்கு, இல்லாத சொல்லாதவற்றைக்கூறி உசுப்பேற்றிக் குளிர்காயவும் எண்ணுகிறார்கள்
இதை அனைத்துத்தரப்பும் கவனத்திற் கொள்ள வேண்டும். உண்மையான உணர்வுளுக்குள் கருத்து மோதல்கள் இருக்கலாம் ஆனால் இலட்சியத்தால் ஒன்றிணைந்த எமக்குள் விரிசல்கள் ஏற்படுவது ஆரோக்கியமாக எப்போதும் அமையாது.

உண்மைகள் உணர்ந்தும்
கூட்டத்தோடுதான் கூடி நிற்போம் என்று நிற்கின்ற தமிழின உணர்வாளர்களே, பொறுப்பில் உள்ளவர்களே, தமிழாலய நிர்வாகிகளே, ஆசிரியர்களே வரலாற்றுத் துரோகத்துக்குத் துணைபோகாதீர்கள்
என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
கட்டமைப்புக்களைச் சிதைப்பது, தமிழாலயங்களைப் பிரிப்பது எமது நோக்கமல்ல. திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெறுவதற்கான போராட்டமே எமது போராட்டம்.
நாம் தமிழர்கள் வேறு யாருமல்ல. தவறுகளை, பிழைகளை, எமது இனத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கின்ற உரிமை உலகின் எந்த மூலையில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற உண் மை புரியாது கொக்கரிப்பவர்கள் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

அனைத்துலகம், மேல்மட்டம்,
அவர் இவர் என்று ஒருவர் ஒருவரைக் குற்றஞ்சாட்டாது காலங்களைக் கடத்தாது திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்ட பாடநூல்களை மீளப்பெற்று, பொறுப்புடன் அனைத்துத்தரப்பும் உண்மை நிலையுணர்ந்து கொள்ளல் அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். நீண்ட நெடுந்தூரம் பலவழிகளில் ஒன்றாகப் பயணித்து சிலபல ஏற்புடையற்ற காரணங்களின் நிமித்தம் அமைதியாக இருந்தவேளை தற்போதைய சூழல் மனவுளைச்சல்களையும், தேவையற்ற முரண்பாடுகளையும் உருவாக்கியுள்ளது என்பதை வேதனையோடு பதிவுசெய்கிறேன்.

லோ. வலன்ரையின்