கோத்தாவை தொடர்ந்து தலிபான்களும் ஜநாவில்!
இலங்கை ஜனாதிபதி கோத்தாவின் பங்கெடுப்பையடுத்து ஜநா செல்ல தலிபான்களும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் புதிய நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை நியமித்துள்ள தலிபான்கள், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ஆப்கான் பங்கேற்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள், அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்தனர்.
கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசமாகிய பின்னர், 70க்கும் மேற்பட்டோர் கொண்ட இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர்.
நியூயோர்க் நகரில் செப்டெம்பர் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில், சுஹைல் ஷாஹீன் பங்கேற்கவும், வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவும் தலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தலிபான் வெளிவிவகார அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆப்கான் சார்பில் ஐ.நா. கூட்டத்தில் தான் பங்கேற்று உரையாற்ற அனுமதி கோரி கோரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஒன்பது பேர் கொண்ட ஐ.நா. குழுவுக்கு ஆப்கானின் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.