November 22, 2024

பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

சர்ச்சைக்குரிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து தனது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்திவரும் பிரான்ஸ், தற்போது பிரித்தானியாவுடனான பாதுகாப்பு பேச்சுக்களை மீளெடுத்துள்ளது.

இதனிடையே குறித்த முத்தரப்பு உடன்படிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள வடகொரியா, குறித்த உடன்படிக்கை அணு ஆயுதப் போட்டி வழிகோலும் என எச்சரித்துள்ளது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான புதிய முத்தரப்பு உடன்படிக்கையை அடுத்து தமது நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் கொள்வனவு உடன்படிக்கையை அவுஸ்திரேலியா இரத்துச் செய்தமை தொடர்பிலும் பிரான்ஸ் தனது ஆத்திரத்தை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த உடன்படிக்கை குறித்து பிரான்ஸ் எந்தவொரு கவலையும் கொள்ள வேண்டிய தேவையில்லை என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் உடன் லண்டனில் நடைபெறவிருந்த பேச்சுக்களை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இரத்துச் செய்துள்ளார்.

இதனிடையே முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை, நட்பு நாடுகளுக்கு இடையில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் எதிர்பாராத நடவடிக்கையாக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களையும் பிரான்ஸ் மீள அழைத்திருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த இந்தப் பேச்சுக்களுக்கு பிரான்ஸ்சிற்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் ரிக்கெட்ஸ் பிரபு தலைமை வகிக்கவிருந்தார்.

இந்தப் பேச்சுக்கள் மற்றுமொரு திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதை ரிக்கெட்ஸ் பிரபு உறுதி செய்துள்ளார். இதனிடையே முத்தரப்பு உடன்படிக்கையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் பிரான்ஸ் அரச பிரதிநிதிகளுடன், அமெரிக்க அதிகாரிகள் நியூயோர்க்கில் பேச்சு நடத்தவுள்ளனர்.

இதனிடையே ஐ,நா பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் பயணமாவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட பொறிஸ் ஜோன்சன், பிரித்தானியாவிற்கும் பிரான்ஸ்சிற்கும் இடையிலான உறவு அழிக்க முடியாத ஒன்றென கூறியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் மிகவும் நட்பான உறவுகள் காணப்படுவதாகவும் இது மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய முத்தரப்பு உடன்படிக்கையை எட்டியுள்ளதன் மூலம் பிரான்ஸ்சை விலகிவைப்பதாக அர்த்தப்படாது எனவும் அது குறித்து யாரும் கரிசனை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொறிஸ் ஜோன்சன் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் முத்தரப்பு உடன்படிக்கை எட்டப்பட்டமை குறித்து வடகொரியா கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என வடகொரியா கூறியுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மூலோபாய சமநிலையை குறித்த உடன்படிக்கை சீர்குலைக்கும் என வடகொரிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கை மூலம் அணு வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவிற்கு வழங்கவுள்ளதாக வடகொரியா கூறியுள்ளது.

தென் சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் முயற்சியாக குறித்த முத்தரப்பு உடன்படிக்கை நோக்கப்படுகின்றது. இந்த உடன்படிக்கையானது மிகவும் விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான செயன்முறையாகும் எனவும் வடகொரிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்தீரத்தன்மையை சீர்குலைக்கும் பொறுப்பற்ற நடவடிக்கை என குறித்த உடன்படிக்கையை அயல்நாடான சீனா கண்டித்தமை இயல்பான ஒரு விடயம் எனவும் வடகொரியா கூறியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக மற்றுமொரு நாட்டுடன் தமது நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை அமெரிக்கா பகிர்ந்துகொள்ளவுள்ளது. முன்னதாக பிரித்தானியாவுடன் இவ்வாறு நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை அமெரிக்கா பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.