November 23, 2024

ஸ்ராலினிற்கு சி.வியும் நன்றி கூறினார்!

தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிரமங்கள் மத்தியில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நன்மை அளிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில், 110வது விதியின் கீழான அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளமை மிக்க   மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. இதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் தமிழக முதல்வரிற்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உட்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அவர்களுக்கு வழங்க இருக்கின்றார். அத்துடன், இலங்கைத் தமிழர் அகதிமுகாம் என்பது இனி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்று  சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளமை இலங்கை தமிழ் மக்களின் பால் அவர் கொண்டுள்ள பாசம், அரவணைப்பு ஆகியவற்றை காட்டுகின்றது. அத்துடன், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு “உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம்” என்ற ஒரு செய்தியைச் சொல்லுவதாக அமைவதாகவும் நான் உணர்கின்றேன்.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான ஒரு தீர்வினை காண்பதற்கு எதிர்வரும் காலங்களில் தமிழக முதலமைச்சர் அவர்கள் காத்திரமான பல நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கை இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஆய்வுகள், உபாயங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு தமிழ் நாட்டின் புத்திஜீவிகள், கல்விமான்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கொண்ட கட்சிசாரா சிந்தனை மையம் ஒன்றை  அரசாங்கத்தின் ஒரு நிறுவனமாக தமிழக முதலமைச்சர் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேண்டுகோள் ஒன்றை பணிவுடன் முன்வைக்கின்றேன். அத்தகைய ஒரு நிறுவனத்தை அரசாங்கத்தின் ஒரு அங்கமாக ஏற்படுத்தும்போது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த நிறுவனம் நீடித்து நிலைத்து தமிழ்மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குப் பெரும் பணியை ஆற்றமுடியும்  என்பது எனது நம்பிக்கை.

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலமாக  அமையும் என்பதிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ் நாடு விரைவில் பரிணமிக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதேபோல, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களுக்கும் தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலம் பல்வேறு வழிகளிலும் ஆதாரமாக அமையும் என்பதிலும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றதெனவும் தெரிpவித்துள்ளார்.