November 22, 2024

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்!! சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல்

ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு.அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான ஓகஸ்ற் 30ம் திகதியினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 30.08.2021 திங்கள் அன்று சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நிலவும் அசாதாரண சூழலிலும் அரசின் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சுவிஸ் தமிழர் அரசியல்துறை, இளையோர் அமைப்பு, பெண்கள் அமைப்பினரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி கனத்த இதயங்களுடன் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வேற்றின மக்கள் அதிகம் நடமாடும் பகுதியும், உயர்தரப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் அமைந்துள்ள பகுதியுமாக அமையப்பெற்ற திடலில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஒன்றுகூடலில் சிங்களப் பேரினவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையினை முன்வைத்து கண்காட்சி மற்றும் வேற்றின மக்களுக்கான துண்டுப்பிரசுர விநியோகமும் முன்னெடுக்கப்பட்டன.