November 21, 2024

செயற்கை பசளை இல்லாத விவசாயம் சாத்தியமா ?

இலங்கை அசு தடாலடியாக செயற்கைப் பசளைப் பாவனையைத் தடைசெய்துள்ளது .
இதன் சாதக பாதக்கங்கள் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்
மண்ணில் இறங்கிப் பயிர் செய்யாதவர்களும் , எந்தவித விவசாய அறிவு இல்லாதவர்களும் இதுபற்றி தத்தமது பத்திரிகைகளான முகநூலில் எழுதிக் குவித்த வண்ணம் இருக்கிறார்கள் .
மக்களைக் குழப்புகிற இந்த பதிவுகள் விவசாயிகளை பெரும் இக்கட்டுக்குள்ளாக்குகின்றன .
முதலாவதாக இந்த செயற்கை பசளைகளை, விவசாய இரசாயனங்கள் என்ற பதம்கொண்டு அழைப்பதை நிறுத்த வேண்டும் .
செயற்கை பசளையான ,பொட்டாசியம் குளோரைட்டு என்ற உப்பு விவசாய இராசயனம் என்றால் , கறியுப்பாக நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு என்ற உப்பும் இராசயனமேதான் .
பொட்டாசியம் குளோரைடு , சூப்பர்பொசுபேற்று , யூரியா ஆகியவற்றை , செயற்கை உரங்கள் அல்லது அசேதன உரங்கள் என்ற பெயரால் அழைப்போமாயின் அரைவாசிக் குழப்பங்கள் தீர்ந்துவிடும் .
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் , களைகொல்லிகள் என்பனவே அபயாகரமான விவசாய இராசயனம்கள் ஆகும் .
முதலில் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்களைப்பார்போம்
1) மாமூலகங்கள் ~
நைதரசன்( N ) , பொசுபரசு (p) , பொட்டாசியம் ( k ) என்பன அதிக அளவிற்க்கு பயிர்களுக்கு தேவைப் படுகின்ற சத்துக்களாகும்
இதில் நைதரசன் , பதியவளர்சிக்கும் , பொட்டாசியம் வேர் வளர்ச்சிக்கும் நோய்எதிர்ப்பு திறனுக்கும் தண்டு வளர்ச்சிக்கும் , பொசுபரசு தானியம் ,விதைகள் என்பன உருவாக்கத்திற்கும் அவசியமானவை .
2 ) நுண்மூலகங்கள் (Micro elements) ~
மகனிசியம் ,கல்சியம் , கந்தகம் ,என்பன நுண்மூலகங்கள் எனப்படும் .இவை பயிர்களுக்கு சிறிய அளவில் தேவைப்படும் .
3) சுவட்டு மூலகங்கள் ( Race elements) ~ செப்பு , நாகம் , போறன் ,— போன்றவை சுவட்டு மூலகங்கள் எனப்படும் .
இவை மிககுறைந்த அளவில் பயிர்களுக்குத் தேவைப்படும் .
மேற்சொன்ன மூலகங்களில் ஏதாவது ஓன்று குறைவுபட்டாலும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் .
நுண்மூலகங்களினதும் , சுவட்டு மூலகங்களினதும் போதாமை பயிர்களில் பெரிதாக வெளித்தெரியாது .
ஆனால் மாமூலகங்களின் போதாமை பயிர்களில் பெரிதாக காட்டப்பட்டு விளைச்சல் பெரிதளவில் பாதிக்கப்படும் .
இந்த மாமூலகங்களில் நைதரசனை கொண்ட யூரியா , பெற்றோலிய உபவிளைவாகத் தயாரிக்கப்படுகிறது .
பொடட்டாசியம் குளோரைட்டு உப்பு , பொட்டாசிய உப்பு பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது .
பொசுபரசு , பொசுபரசு பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது .
இலங்கையில் எப்பாவல என்ற இடத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பொசுபரசு உப்பு , எப்பாவல அப்பிறைற் என்ற பெயரில் செயற்கைப் பசளையாக விற்பனை செய்யப்படுகிறது .
அறுபதுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட பசுமைப்புரட்சியின்போது இந்தச் செயற்கைப் பசளைகள் அறிமுகப்படுத்தப்பட்டன .
அதைத் தொடர்ந்து இந்த செயற்கைப் பசளைக்கு தூண்டல் பேறுடைய வீரிய இனங்ளான கலப்பு பிறப்பாக்கல் விதைகளும் (High breed seeds) தேர்வுமுறை மூலம் கண்டு பிடிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளும் (Selected breed seeds) அறிமுகம் செய்யப்பட்டன .
விவசாயத்தைப் பற்றி அறிவற்ற பல பதிவாளர்கள் இந்த High breed இனங்களை மரபணு மாறப்பட்ட இனங்கள் எனப் பதிவிட்டு குழப்பத்தை உருவாக்குகிறார்கள் .
இலங்கையைப் பொறுத்தவரை மரபணு மாற்றப்பட்ட இனங்களைப் பயிரிடல் சட்டபூர்வமாக தடுக்கப்பட்டுள்ளதாக வியசாயத்திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரி Seerangan Periyasamy தெரிவிக்கிறார் .
ஆக , அறுபதுகளில் இருந்து அறிமுகமாகி இன்றுவரை மேலும் மேலும் திருந்திய இனம்களாக அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படும் வீரியரக பயிர்வகைகள் எல்லாம் செயற்கைப் பசளைக்கு தூண்டல்பேறு உடைய இனம்களே .
இவ்வீரிய இனப் பயிர்வகைகள் உரம் எனப்படும் செயற்கைப் பசளை பாவிக்காவிடின் விளைச்சலைக் கொடுக்க மாட்டாது .
பொருளாதார நிபுணர்களையோ , விவசாய நிபுணர்களையோ கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படட இம் முடிவு , இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் .
முன்னோக்கி சுழலுக்கின்ற சக்கரத்தை , திடீர் என பின்னோக்கி சுழலளவிட்டால் அது கியர் பொக்ஸை உடைக்கும் என்பது வெள்ளிடைமலை .
சரி ! செயற்கை பசளை பாவனையை நிறுத்தி விட்டு இயற்கைப் பசளைப் பாவனைக்கு திரும்புகிறோம் என வைப்போம் .
பின்வரும் கணக்கீடுகளை ஒருமுறை அவதானியுங்கள் .
100 Kg மாட்டெருவில் உள்ள சத்துக்கள் கீழ்வருமாறு
நைதரசன்( N) ~ 1.22
பொசுபரசு ( P) ~ 0.62
பொட்டாசியம் ( K ) ~1.2
ஒரு தென்னை மரத்திற்கு ஒரு வருடத்திற்கு அண்ணளவாக 0.27 Kg நைதரசன் தேவை .
இதன் அடிப்படையில் 0.27Kg நைதரசனை பெற அண்ணளவாக 30kg மாட்டெரு இடவேண்டும் .
ஒரு ஏக்கரில் 64 தென்னைமரங்கள் இருக்கும் .
64 தென்னை மரங்களுக்கும் ஏறதாளா 2000 Kg மாட்டெரு தேவை .
10 ஏக்கர் கொண்ட தென்னம் தோப்பிற்கு பசளையிட 20000 Kg மாட்டெரு தேவைப்படும் .
100 , 1000 ஏக்கர் எனச் செய்கை பண்ணப்படும் நெல் வயலுக்கு எவ்வளவு மாட்டெரு தேவைப்படும் என்பதனைக் கணக்குப் பாருங்கள் .
1 ) இவளவு தொகையான மாட்டெருவோ , கூட்டெருவோ ,ஆட்டெருவோ , கோழியெருவோ நம்மிடம் தற்போது கைவசம் உள்ளதா ?
2 ) இவளவு தொகை எருவையும் சேகரித்து வயலுக்கு கொண்டுபோக எவ்ளவு போக்குவரத்து செலவாகும் ?
3 ) இவளவு தொகையான எருவை வயலில் இட்டு முடிக்க எத்தனை நாட்களாகும் ?
எவளவு கூலி முடியும் ?
4) அந்நியசெலவாணியை நமக்கு ஈட்டித்தருகிற ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள பெரும்தோட்டப் பயிர்களான தேயிலை , இறப்பர் , தென்னை போன்றவற்றுக்கு பசளையிட என்ன செய்யப் போகிறோம் ?
5 ) அரிசியையே பிரதான உணவாக கொள்ளும் எம்மவர்களுக்கு இம்முறை மூலம் போதிய அரிசி கிடைக்குமா ?
6 ) பெருகிவரும் மக்கள்தொகைக்கு உணவு கொடுக்க இம்முறையால் முடியுமா ?
இக்கேள்விகள் பற்றி சிந்தித்து பார்த்தீர்களா ?
நஞ்சற்ற உணவு எமக்கு கிடைக்க வேண்டும் என்பது உண்மைதான் .
ஆனால் உணவாவது கிடைக்குமா என்பதுதான் எனது கேள்வி .
சிலர் பொஸ்போ பக்ரிறியா , அசோஸ்பைரில்லம் , சூடாமோனாஸ் போன்ற உயிர் உரங்களை பாவிக்கலாம் என சொல்கிறார்கள் .
சூடாமோனாஸ் , அசோஸ்பைறில்லம் என்பன காற்றில் உள்ள நைதரசனை கிரகித்து பயிருக்கு கொடுக்கும் .
சரி ! மீதமான பொட்டாசுக்கும் , பொசுபரசுக்கும் என்ன செய்யவது ?
பொஸ்போபக்ரிறியா என்ற உயிர்உரம் மண்ணில் காணப்படும் , கரையமுடியாத பெரிக்பொஸ்பேற்றை கரைத்து பயிருக்கு கொடுக்கும் .
மண்ணில் பொஸ்பேற்றே இல்லையாயின் இந்த உயிர்உரம் என்ன செய்யும் ?
எத்தனை கரைத்து பயிருக்கு பொஸ்பேற்றைக் கொடுக்கும் ?
செயற்கை பசளை நஞ்சாவது எவ்வாறு ?
*********
ஒருநாளைக்கு ஆரோக்கியமான மனிதன் ஒருவனுக்கு இரண்டு கிராம் கறியுப்பு போதுமானது .
பத்து கிராம் உப்பை ஒருவன் உண்டால் அது அவனுக்கு நஞ்சாகும் .
பால் ஒரு நிறையுணவு .
ஒருவன் தினமும் இரண்டு லிற்றார் பாலை அருந்துவனாகில் அவன் நோய் பிடித்து இறப்பான் .
அவ்வாறே அளவுக்கதிகமான உரப்பாவனை தாவரங்களுக்கு தீங்காவதோடு , மனிதனுக்கும் , மண்ணுக்குக்கும் , நீருக்கும் நஞ்சாகிறது .
விவசாய விஞ்ஞானிகள் ஒவ்வோர் பயிருக்கும் எவ்வளவு எவ்வளவு உரம் தேவை என கணக்கிட்டு வைத்துள்ளார்கள் .
அந்த கணக்கின்படி செயற்கை உரங்களை கலந்து (N P K) பகுதி பகுதியாக பயிருக்கு இடுவோமாயின் பயிர் அவ்வளவு உரத்தையும் கிரகித்து விடும் .
இதனால் மண்ணோ நீரோ மாசுபடாது .
பொதுவாக எமது அளவுக்கு அதிகமான உரப்பாவனையே எமக்கும் நஞ்சாகி , மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகின்றன .
தனியே செயற்கை உரங்களை மட்டும் இடாது , இயற்கையாக கிடைக்கக் கூடிய இயற்கை உரங்களுடன் கலந்து இடும்போது , மண்ணில் உள்ள நன்மைதரும் நுண்ணுயிர்கள் பெருகின்றன .
எனவே நஞ்சான , விவசாய இரசாயனம்களான பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் என்பனவற்றின் பாவனை நிறுத்தி , செயற்கைப் பசளைகளை விவசாய இராசயனம்கள் என்ற வகைக்குள் அடக்கி விஷம் விஷம் என கூப்பாடு போடுவதை நிறுத்தி , பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க , சிபாரிசு செய்யப்பட்ட அளவில் மடுப்படுத்தப்பட உரப்பாவனைக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் .
குறிப்பு ~
இங்கு பதில் கருத்து தெரிவிப்போர் , தமக்கு ஆதாரம் காட்ட youtube காணொளியை இணைப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .
நானும் ஒரு 100 youtube காணொளிகளைப் பார்த்துவிட்டுத்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன் .
பெரும்பாலான youtube கள் எந்தவித ஆதாரமோ விஞ்ஞான விளக்கமோ அற்ற புழுகுகள்.
#அடுத்த பதிவு சேதன விவசாயம் எனப்படும் இனிப்பு குளிகை#
—வடகோவை வரதராஜன் —
—02 / 07 / 2021 —