November 21, 2024

பஸிலிற்காக பலியாடாகும் முஸ்லீம்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றம் தெரிவான முஸ்லிம் எம்பி ஒருவரை பதவி துறக்குமாறு பஸில் கட்டளையிட்டுள்ளார்.

வர்த்தக பின்னணியைக்கொண்ட மொஹமட் பளீல் மர்ஜான் என்ற தேசியப்பட்டியல் எம்.பிக்கே பஸிலிடமிருந்து மேற்படி கட்டளை பறந்துள்ளது.

பஸினின் இந்த முடிவுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என அரசாங்கத்தின் உட்கட்சி தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்துக்கு நேசக்கரம் நீட்டிய முஸ்லிம் எம்.பிக்களும் இந்த முடிவுக்கு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

.

20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலம் இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு நாடாளுமன்றம் வருவதற்கு வழி செய்யப்பட்டது. இதற்கு குறிப்பாக எதிர்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்பிக்களும் , மொஹமட் பளீல் மர்ஜான்  எம்பியும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

அத்துடன், மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் வர்த்தகர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சிங்கள், பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக முஸ்லிம் எம்பி ஒருவரை பஸில் ராஜபக்ச இவ்வாறு இலக்கு வைத்துள்ளார் என்ற சந்தேகம் மேற்படி வர்த்தகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் எதிர்ப்பார்ப்பு பஸிலிடம் உள்ளது. இதனை குறிவைத்து அரசியல் ரீதியிலான காய்நகர்த்தல்களும் இடம்பெற்றுவருகின்றன.  இதன் ஓர் அங்கமாகவே சிங்கள, பௌத்த மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பஸில் ராஜபக்ச இவ்வாறு முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்கு , மொட்டு கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் சிலர் தயாராகவே உள்ளனர் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன்படி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பியான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, பதவி துறப்பார் எனவும், அவருக்கு ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவி வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டிருந்தது என தகவல் வெளியானது.

நல்லாட்சி காலத்தில் ராஜபக்ச தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகளில் ஜனாதிபதி சட்டத்தரணியான இவர் இலவசமாக முன்னிலையாகி வாதாடினார். இதற்கு நன்றிக்கடனாகவே ஜயந்த வீரசிங்கவுக்கு தேசியப்பட்டியல் ஊடாக சட்டவாக்க சபைக்குவர அனுமதி வழங்கப்பட்டது .

எனினும், பதவி துறப்பதற்கு ஜயந்த வீரசிங்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை பதவி துறக்க வைத்து, அவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கான நகர்வும் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு நிதி அமைச்சின் செயலாளர் பிபீ ஜயசுந்தர கடும் எதிர்ப்பை வெளியிட அந்த யோசனையும் கைவிடப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பளீல் மர்ஜானை பதவி விலகுமாறு பிரதமர் அலுவலக அதிகாரிகள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமரின் செயலாளர் காமினி செனரத், மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் மர்ஜான் எம்பி உடன் இது குறித்து பேசியுள்ளனர்.

பஸிலுக்காக இந்த தியாகத்தை செய்யுமாறு தயவாக கேட்டுள்ளனர். அத்துடன் பேரமும் பேசப்பட்டுள்ளது. இதற்கு எந்த பதிலையும் தெரிவிக்காத மர்ஜான் எம்.பி. , பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன்பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது, எக்காரணம் கொண்டும் பதவிவிலக தேவையில்லை என மர்ஜான் எம்பிக்கு பிரதமர் தெரிவித்தார் என அலரிமாளிகை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ நீங்கள் பதவி விலக வேண்டியதில்லை. எந்த நேரத்திலும் பதவி விலகுவதற்காக தனி நாடாளுமன்ற உறுப்பினர்களை பஸில் ராஜபக்ச நியமித்துள்ளார்.  உங்களை  நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தது நான். அத்துடன் உங்களை பதவி விலகினால், மீதமுள்ள கொஞ்சம் முஸ்லிம் மக்களும் எம்மோடு கோபித்துக் கொள்வார்கள். “ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச  மர்ஜான் எம்.பி க்கு தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வர வர்த்தகரான மர்ஜான் எம்.பி., மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகின்றார்.

அத்துடன், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்சவுக்கு மிகப்பெரிய உதவிகளையும் , பண உதவிகளையும் செய்துள்ளதால், அவருக்கு இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இவ்வாறு ராஜபக்ச தரப்பினருக்கு மிக நீண்டகாலமாக உதவி செய்து வந்த முஸ்லிம் முஸ்லிம் எம்பி ஒருவரின் பதவியை பறிப்பதற்கே தற்போது பஸில் ராஜபக்ச தயாராகிவருவது அரச விசுவாசிகள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் உறுப்பினர் ஒருவரின் தியாகத்தின் அடிப்படையிலேயே பஸில் ராஜபக்ச இதற்கு முன்னதாக முதன்முறையாக நாடாளுமன்றம் வந்திருந்தார்.

2007ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் திகதி அன்று அன்வர் இஸ்மாயில் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்தார்.

இந்த வெற்றிடத்துக்கு 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

அன்வர் இஸ்மாயில் பதவி வகித்த முஸ்லிம் கட்சியின், மற்றுமொரு உறுப்பினரு;கு அந்த பதவிக்கு சிபாரிசு முன்வைக்கப்பட்டபோதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, பஸிலுக்கு அந்த வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தின்போது தமிழ் , முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பஸில் ராஜபக்ச வென்றிருந்தார். அவர் இனவாத நோக்கமற்றவர் என்பதாலேயே அவரின் நாடாளுமன்ற வருகையை ஆதரித்து முஸ்லிம் எம்பிக்கள்கூட வாக்களித்திருந்தனர். இந்நிலையில் பஸிலின் இந்த திடீர் நகர்வு பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

இந்த சர்ச்சையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்ம கெட்டகொடவை பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.