வெகுவிரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி –
பாடசாலை மாணவர்களுக்கு வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.ஈதனடிப்படையில் 7 இலட்சம் தடுப்பூசிகளை, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அவ்வாறான ஊழியர்கள் 2 இலட்சத்து 79 ஆயிரம் பேர் வரையில் உள்ளனர். வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும். எப்படியிருப்பினும் திகதியை தற்போது கூற முடியாத நிலைமைகள் உள்ளன.
இரண்டு தடுப்பூசிகளையும் வழங்க முடியாதென்றாலும் ஒரு தடுப்பூசி வழங்கியாவது பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் தற்போது திகதி குறிப்பிடப்பட்டுள்ள புலமைபரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை பிற்போடுவதற்கு எந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த விடயம் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1