Dezember 3, 2024

பிரித்தானியாவில் ஒரே நாளில் எதிர்பாராத உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

பிரித்தானியாவில் ஒரே நாளில் எதிர்பாராத உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (செவ்வாய்க்கிழமை) 53,135 கொரோனா பாதிப்புகளும், 414 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதன்மூலம் பிரித்தானியாவில் இதுவரை கிட்டத்தட்ட 2,800,000 தொற்றுகளும், மொத்தம் 71,386 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

கடந்த திங்களன்று, 41,385 புதிய தொற்றுகள் மற்றும் 357 இறப்புகள் பதிவாகியிருந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 12,000 தொற்றுகள் பதிவாகியுள்ளது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

“பிரித்தானியாவில் எதிர்பாராத வகையில் அதிகமான கொரோனா தொற்றுகள் தொடர்ந்து பதிவாகிவருவதை நாங்கள் காண்கிறோம், குறிப்பாக மருத்துவமனைகளின் நெருக்கடியான நிலையைக் காண்கையில் மிகவும் வேதனை அளிக்கிறது” என Public Health England-ன் முத்த மருத்துவர் ஆலோசகர் டாகடர். சூசன் ஹாப்கின்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தற்போது பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், லண்டன் உட்பட நாட்டின் பல முக்கிய பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, மேலும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.