November 22, 2024

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று

ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.அதில் எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை எம்மிடம் கொள்கை இல்லை கொள்கை இல்லை என்று அநேகமாக பதிவிடப்படுகின்றது. எங்களிடம் கொள்கை இல்லை கொள்கை இல்லை என்று எதைக் கொண்டு எவ்வாறு இவர்கள் அளவிடுகின்றார்கள். எங்களுக்கு கொள்கை இல்லை என்று தெரிவிப்பதற்கான தகுதி அதிகாரம் எவ்வாறு இவர்களிடத்தில் இருக்கின்றது.

இரண்டாவது கொள்கை இல்லை கொள்கை இல்லை என்று கூறுகின்றார் .அப்படி என்ன கொள்கை எம்மிடத்தில் இல்லை என்று இவர்கள் கூறவருகின்றார்கள் என்றும் தெரியவில்லை.

பத்து வருடங்கள் ஒரு கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக இருந்து பல தேர்தல்களில் போட்டியிட்ட கடைசித் தேர்தலில் பலவந்தமாக தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்ட ஒருவரை தேர்தல் முடிந்து 6 நாட்களின் பின்னர் அவரிடம் கொள்கை இல்லை என்று கூறிக்கொண்டு கட்சியை விட்டு நீக்குவதுதான் கொள்கை என்றால் உண்மையாக அந்த கொள்கை எம்மிடம் இல்லை.

தேர்தல் காலத்தில் மணிவண்ணன் வெற்றிபெறக்கூடாது அவர் வெற்றி பெற்றால் இந்த கொள்கையைக் கொண்டு செல்ல முடியாது என்று எமக்கு கூறியவரே மணிவண்ணன் என்னும் சட்ட ஆளுமை தமிழ்த்தேசியத்தின் செழுமை அவன் வெற்றியே தமிழருக்கு பெருமை என்று கவிதை எழுதி போடுவது தான் கொள்கை என்றால் அந்த கொள்கை எமக்கு இல்லை.

மணி இல்லாவிட்டால் அழித்து விடுவோம் என்று எமக்கு கூறி மணியை கொண்டு வருவதற்கு எம்மை கருவியாக பயன்படுத்திய பின்னர் மணியை நீக்கிய போது ஏன் நீக்கினீர்கள் என்று கேட்டதற்கு கட்சி அழிந்தாலும் பரவாயில்லை இது தான் முடிவு என்று கூறுவது தான் கொள்கை என்றால் அது எங்களிடம் இல்லை.

தங்களுடைய துண்டுப்பிரசுரங்களை தந்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுங்கள் எனக்கு மட்டும் போடச்சொல்லி என்று தந்து விட்டு தேர்தல் முடிந்த பிற்பாடு நான் தான் எல்லாவற்றுக்கும் காரணம் நானே ஆணிவேர் ,பக்கவேர் ,நடு வேர் என்று பதிவிடுவதுதான் ஒற்றுமை கொள்கை என்றால் சத்தியமாக எங்களிடத்தில் அது இல்லை.

ஒரு நபர் தன்னுடைய காரினை ஐந்து ஆறு மாதங்கள் தேர்தல் காலம் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு வழங்கியபோது அதனைப் பெற்றுக்கொண்டு பயன்படுத்தி விட்டு காரணமே இல்லாமல் அந்த நபரையே கொள்கை இல்லை உங்களுடைய நேர்மையில் சந்தேகம் என்று கூறுவது தான் கொள்கை என்றால் எங்களிடம் அது இல்லை தான்.

பெண்தலைமைத்துவத்தைக் கொண்ட பெண் ஒருவரை கடந்த உள்ளுராட்சி தேர்தலின் பேர்து தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் பணிபுரிந்த சிறு பணியையும் விட்டு வாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள்.தேர்தலில் போட்டியிட வைத்து பின்னர் அந்த பெண் அத் தேர்தலில் தோற்ற பின்னர் அந்த பெண்ணை கட்டுகொள்ளாமல் விட்டு விட்டு அந்த பெண் தன்னுடைய வேலையையும் இழந்து சாப்பாட்டுக்கு அல்லல் பட்டு தற்கொலை செய்யப்போகின்றேன் என்று அழுத போது எல்லாம் எப்படியாவது அந்த பெண்ணுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறி உதவி செய்ய வைத்து விட்டு பின்னர் செய்த அந்த உதவியையையே கேவலம் செய்கின்றது தான் கொள்கை என்றால் சத்தியமாக அந்த கொள்கை யாரிடமும் இல்லை.

தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரிந்த ஒருவர் அது அவருக்கு மிகவும் பிடித்தமான துறையாக இருப்பினும் அங்கு பணிபுரிவது தன்னுடைய இனத்திற்கு செய்யும் துரோகம் என்று எண்ணி அந்த பணியைவிட்டு விலகி ஒரு ஆசிரியாக பணிபுரிகின்றவரை தேசத்துரோகியாகவும் கொள்கை இல்லாதவராக பார்க்கப்படுவது தான் உங்கள் கொள்கை என்றால் அந்த கொள்கை எம்மிடம் இல்லாமலே இருக்கட்டும்.

ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றி 52000 ஆயிரம் ரூபா மாதச் சம்பளத்தில் பணிபுரிந்த ஒருவர் அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் முகாமைத்துவம் தமிழ்த்தேசியத்திற்கு ஏற்புடையது அல்ல என்ற காரணத்திற்காக அதை விட்டு நீங்கி தற்போது அதிலும் குறைவான சம்பளத்தில் வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவரை துரோகி புல்லுருவி என்பது தான் கொள்கை என்றால் அந்த கொள்கை எம்மிடம் வராமலே இருக்கட்டும்.

கடந்த உள்ளுராட்சி தேர்தலில் சபை உறுப்பினராக தனக்கு தரவேண்டும் என்று கருத்து முரண்பட்டு பின்னர் அது பெண்களுக்கு உரிய ஆசனம் என்று தெரிந்த பிற்பாடு தான் சொல்லுகின்ற பெண்களைப்போடுங்கள் என்று கூறி முரண்பட்டவர்கள் தான் தற்போது பதவி ஆசை கொள்கை என்று எமக்கு வகுப்பு எடுக்கின்றார்கள் என்றால் அந்த கொள்கை எங்கிடம் இல்லைதான்.

ஏதோ ஒரு உள்முரண்பாடு காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை விட்டு பிரிந்து வந்து விட்டு தற்போது கொள்கை பதவி என்று பதிவிடுபவர்களை நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை விட்டு பிரிந்து வந்ததனால் கொள்கை இல்லாதவர்கள் என்று பதிவிவிடும் அளவுக்கு சிறுமைத்தனம் எம்மிடம் என்றும் இருக்கவில்லை.

நீங்கள் எங்களை துரோகிகள் புல்லுருவிகள் எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாக்கள், ஆணிவேர், வல்லரசு இயக்குகின்றது நிகழ்ச்சி நிரல் என்று சொல்லும் போது தான் எமக்கு ஒரு தெளிவு பிறக்கின்றது நீங்கள் இப்படிதான் மற்றவர்கள் மீதும் பொய்களை வாரி இறைத்திருக்கின்றீர்கள் என்று. அதை எல்லாம் நாமும் நம்பி இருக்கின்றோம் என்று வேதனையடைகின்றோம். காலம் தான் சிறந்த பாடத்தை தரும் அந்தவகையில் எமக்கு சிறந்த பாடம் உங்கள் விமர்சனங்களால் கிடைக்கப்பெற்றுள்ளது.

எங்களை றோ என்று கூறுகின்றீர்கள். நாங்கள் றோ என்று உங்களுக்கு எவ்வாறு தெரியும் ஒன்று நாங்கள் உங்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். நாங்கள் றோவுடன் தொடர்படையவர்கள் என்று அல்லது றோ உங்களுக்கு சொல்லியிருக்கவேண்டும். இவர்கள் எல்லோரும் எங்களுடைய ஆட்கள் என்று நாட்கள் உங்களுக்கு ஒரு நாளும் சொல்லவில்லை நாங்கள் றோவினுடைய ஆட்கள் என்று. ஆக றோ தான் உங்களுக்கு கூறியிருக்கவேண்டும். அப்படியால் உங்களுக்கும் றோவிற்கும் என்ன தொடர்பு என்றும் நாம் சந்தேகப்படலாம் ஆனால் அப்படி யோசிப்பதற்கு நாம் ஒன்றும் சிறுபிள்ளைத்தானமாக யோசிப்பவர்கள் இல்லை.

ஏங்களுக்கு பின்னால் நிகழ்சிநிரல் உள்ளது .நாங்கள் றோ , வல்லரசு ஒன்று வழி நடத்துகின்றது என்றும் நாங்கள் கொள்கை வழியற்றவர்கள் என்றும் நீங்கள் பிரகடனப்படுத்துவதற்கு இன்னொன்றும் உங்களுக்கு வழியமைக்கும் அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்தது போல பலம்வாய்ந்த புலனாய்வுக் கட்டமைப்பு உங்களிடத்தில் இருந்தால் மட்டுமே உங்களுக்கு தெரியவரும் அவ்வாறு ஒரு கட்டமைப்பு இருந்தால் வாழ்த்துக்கள். பெருமைப்படுகின்றோம்.

கடந்த ஆண்டு திலீபன் அண்ணாவின் நினைவு நாள் அன்று தமிழீழவிடுதலைப்புலிகளின் முக்கிய மத்திய குழு உறுப்பினர் ஒருவரினை அவர் திலீபன் அண்ணாவின் நினைவு நாளினை நடத்தக்கூடாது அவர் கொள்கை இல்லாதவர் என்று சொன்னீர்கள் .அன்று எமக்கு தெளிவில்லை .இன்று எம்மை கொள்கை இல்லாவவர்கள் என்று கூறும் போது தான் அவரையும் சும்மாதான் சொல்லியிருக்கின்றீர்கள் என்று விளங்கியது. உங்களுடைய வார்த்தைகள் எமக்கு அந்த வலியைவிடய பல மடங்கு வலியை அவருக்கு கொடுத்திருக்கும் என்று நினைத்து வெட்கப்பட்டதும் உண்டு.

சொன்னவை சில. இன்னும் நிறையவே இருக்கின்றது. ஆனால் நாங்கள் மௌனமாகவே இருக்கின்றோம். என்னுடைய அப்பாவைப்பற்றி என்னைப்பற்றி எல்லாம் பதிவிட்டீர்கள் என்னாலும் நடந்தவை எல்லாவற்றையும் அவ்வாறே பதிவிட முடியும். ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை மௌனமாகே இருக்கின்றோம். எங்களுடைய இந்த மௌனத்திற்கு காரணம் எங்களுக்குள் உள்ள இவ் இடைவெளி குறுகவேண்டும் பெரிதாக வரகூடாது என்பதற்காக ஆனால் நீங்கள் பெரிதாக்குவதற்கு முயற்சிக்கின்றீர்கள்.

எங்களை நீங்கள் கொள்கை இல்லாதவர்கள் பதவிக்கு சண்டை பிடிப்பவர்கள் துரோகிகள் என்று பட்டம் தருகின்றீர்கள். ஆனால் நாங்கள் என்றும் உங்களை கொள்கை இல்லாதவர்கள் என்று துரோகிகள் என்று பட்டம் தரவும் இல்லை தரப்போவதும் இல்லை. அப் பட்டத்தை தருவதற்கு எமக்கு என்ன அதிகாரம் என்ன தகுதி என்ன அளவு கோல் உள்ளது. ஒரு வேளை இவை எல்லாம் உங்களிடத்தில் இருக்கின்றது போலும் அதுதான் நீங்கள் படங்களை வாரி வழங்குகின்றீர்கள்.

அறம் சார்ந்து ஒருவருடன் நின்றால் அது கொள்கை பிழை நாம் கொள்கை இல்லாதவர்கள் என்றால் நாம் பகிரங்கமாவே ஏற்றுக் கொள்ளுகின்றோம். நாம் கொள்கை இல்லாதவர்கள் தான். உங்கள் விமர்சனங்கள் எதுவும் எம்மை செய்யப்போவதில்லை. தொடந்தும் வேகமாக பயணிக்க வைக்கும் ஊக்கியாகவே உங்கள் விமர்சனங்கள் பார்க்கப்படும்.

இன்று நேர்மை பற்றியும் கொள்கை பற்றியும் பதவி பற்றியும் பதிவிடுபவர்கள் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும் தாங்கள் செய்தவற்றையும் தாங்கள் செய்யுமாறு பணித்தவை பற்றியும் தாங்கள் எம்மிடம் வேண்டிக் கொண்டவை பற்றியும் மீண்டு பார்ப்;பது சிறந்தது. அதவே உங்களது எதிர்காலத்திற்கு உகந்தது.

இன்று கொள்கை உள்ளவர்கள் நாங்கள் தான் என்று கூறிக்கொண்டு எங்களை கொள்கை இல்லாதவர்கள் என்று பதிவிடுகின்றீர்கள். மேற்கூறியவைதான் உங்களுடைய் கொள்கை என்றால் எமக்கு அந்த கொள்கை இல்லை என்றும் நாம் அந்தக் கொள்கையைப் என்றைக்கும் பின்பற்றபோவதும் இல்லை என்றும் உங்களுகே பகிரங்கமாக கூறுகின்றோம்.