பகிடி வதை: கடுமையான தடை?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடி வதை புரிந்த சிரேஸ்ட மாணவர்களின் குற்றச்நாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில்
அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது.புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் பகிடி வதையில் ஈடுபடுபவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைப் பிரகாரம், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் 4 பேருக்குக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்படடுள்ளது.அத்துடன் பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இனிவரும் காலத்தில் பகிடி வதையில் ஈடுபட்டு, குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து கற்றல் நடவடிக்கைகளுக்கான தடை, மகாபொல மற்றும் நிதியுதவிகளைத் தடை செய்தல், உள்ளிட்ட பல விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.