லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கை
லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய சீனா எல்லை பிராந்தியமான லடாக்கில் கடந்த ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவிவருவதோடு இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு ரோந்துப்புள்ளி 15 உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சீனப்படைகள் பின்வாங்கியுள்ளன.
மேலும் பங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை பின்வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே எல்லையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் சீன ராணுவம் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணிகளை அதிகப்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியப்படைகளும் எல்லையில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் எல்லையில் ராணுத்தளங்களை மேம்படுத்தி வருவதை தொடர்ந்து சீன ராணுவ விமானப்படை செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ராணுவ வட்டாரங்கள், ஜின்ஜியாங் மற்றும் திபெத் பிராந்தியத்தில் உள்ள சீன ராணுவத்தின் ஹோடன், கார் குன்சா, காஷ்கர், ஹோப்பிங், டொன்கா ட்சாங், லின்ஷி மற்றும் பங்கட் விமான தளங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், அவை அனைத்தும் சமீபத்திய காலங்களில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளன.
சீன ராணுவம் சமீபத்திய காலங்களில் பல தளங்களை மேம்படுத்தியுள்ளது, இதில் கடினமான முகாம்களை நிர்மாணித்தல், ஓடுபாதை நீளங்களை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் மனிதவளத்தை பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். வடகிழக்கு மாநிலங்களுக்கு எதிரே உள்ள லின்ஷி விமானத் தளம் அவர்களின் முக்கிய ஒரு ஹெலிகாப்டர் தளமாகவும் உள்ளது. தற்போது அவர்கள் அங்கேயும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த சீனர்கள் ஹெலிபேட்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுகோடு பகுதியில் இந்திய ராணுவமும் ஆயத்தத்தை அதிகரித்துள்ளது. அதன் நடவடிக்கைகளை கண்காணிக்க சுகோய் -30 எம்.கே.ஐ மிக் -29 மற்றும் மிராஜ் -2000 விமானங்களை தயார்நிலையில் விமான தளங்களில் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.